

அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு தனது அதிகாரிகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு தனது பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதன் எதிரொலியாக புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதின் பேசியதாவது:
நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷியாவுக்கு இல்லை. ஆனால், அமெரிக்கா அத்தகைய சோதனையில் ஈடுபட்டால் ரஷியாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அண்மைக்கால உத்தரவையடுத்து, அந்த நாடு மீண்டும் அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை நடத்தவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் புதின்.
முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பெய்ஜிங்கில் சந்திப்பதற்கு முன்னதாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்த பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் கடந்த மாதம் 30-ஆம் தேதி அறிவித்தார்.
ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் அணு ஆயுத சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தாங்களும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் பதிவிட்டார். அந்த உத்தரவின் அமலாக்கம் உடனுக்குடன் தொடங்கும் என்றும் அப்போது டிரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக, எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தார். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அந்த ஏவுகணை, எத்தனை ஆயிரம் கி.மீ. வரையும் சென்று இலக்குகளைத் தாக்கும் வரம்பற்ற திறனைக் கொண்டது.
அதனைத் தொடர்ந்து, வரம்பற்ற தொலைவுக்குப் பயணிக்கும், அணுசக்தியில் இயங்கக்கூடிய பொசைடன் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் அக். 29-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த சோதனைகள் மூலம் அணுஆயுதப் போட்டியில் அமெரிக்காவை ரஷியா வெகுவாக முந்திவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ரஷிய, அமெரிக்க சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தாங்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு புதின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இருந்தாலும், டிரம்ப்பின் முந்தைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சோதனைகள் முழு அணு ஆயுத வெடிப்பு சோதனையா, அல்லது அணு ஆயுதங்கள் தொடர்பான பிற சோதனைகளா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் வடகொரியா தவிர வேறு எந்த நாடும் அணு ஆயுத வெடிப்பு சோதனை நடத்தவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள், சக்திவாய்ந்த கணினிகளைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட அணு வெடிப்புகள், அணு இயற்பியல் சோதனைகள், அணு ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப் போர் ஒத்திகைகள் போன்ற சோதனைகளை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் கடைசி முழு அணு ஆயுத சோதனை, "டிவைடர்' என்ற பெயரில் 1992 செப்டம்பர் 23-ஆம் தேதி நவாடா சோதனை தளத்தில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நாட்டில் அணு ஆயுத சோதனைகளுக்குத் தடை விதிப்பதாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் ஹெச்டபிள்யு புஷ் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.