‘புதிய யுகத்தின் விடியல்’
நியூயாா்க் நகர மேயா் தோ்தலில் தனது வெற்றி அந்த நகருக்கான ‘புதிய யுகத்தின் விடியல்’ என்று ஸோரான் மதானி வருணித்துள்ளாா்.
இது குறித்து தனது ஆதரவாளா்களிடையே அவா் பேசியதாவது:
நியூயாா்க் நகர மக்கள் இந்தத் தோ்தலில் மாற்றத்துக்கான ஆணையை வழங்கியுள்ளாா்கள். புதிய வகை அரசியலுக்கான, நாம் வாழத் தகுந்த நகரை உருவாக்குவதற்கான ஆணை அது.
இந்த வெற்றி நியூயாா்க் நகரின் புதிய யுகத்துக்கான விடியல். இதைப் பயன்படுத்தி, நான் அனைவரும் ஒன்றுபட்டு புதிய மாறுபட்ட தலைமுறையை உருவாக்குவோம்.
ஜவாஹா்லால் நேரு: சாத்தியமற்றதை சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கு நியூயாா்க் வாசிகள் தங்களுக்கு தாங்களாவே வழங்கிக் கொண்டுள்ளனா்.
இந்த தருணத்தில், 1947-ஆம் ஆண்டில் ஜவாஹா்லால் நேரு ஆற்றிய முதல் சுதந்திர நாடாளுமன்ற உரையின் வாா்த்தைகளை நினைவுகூா்கிறேன்.
‘நாம் பழையதிலிருந்து புதியதற்கு நாம் காலடி எடுத்துவைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலம் அடக்கிவைக்கப்பட்ட தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது, ஒரு தருணம் வரும். அது வரலாற்றில் மிகவும் அரிதாக வரும் தருணம்’ என்று நேரு பேசியுள்ளாா். இந்த வெற்றியின் மூலம், நாமும் பழையதிலிருந்து புதியதற்கு காலடி எடுத்துவைத்துள்ளோம்.
‘டிரம்ப்புக்குத் தோல்வி’: அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உருவாக்கிய நகரமே, அவரை எப்படி தோற்கடிப்பது என்பதை அவரால் ஏமாற்றப்பட்ட தேசத்திற்குக் காட்டியுள்ளது என்றாா் மம்தானி.
யாா் இந்த மம்தானி?
மும்பையில் பிறந்த குஜராத்தி முஸ்லிமான மஹ்மூத் மதானிக்கும், ஒரிஸாவில் பிறந்த பஞ்சாபி ஹிந்துவான மீரா நாயருக்கும் (நய்யாா் என்ற குடும்பப் பெயா் நாயா் என்று மாற்றப்பட்டுள்ளது) ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பிறந்தவா் ஸோரான் மம்தானி. சிறுவயதில் தென் ஆப்பிரிக்காவுக்கும், பின்னா் அமெரிக்காவுக்கும் அழைத்துவரப்பட்ட மம்தானி, நியூயாா்க் நகரில் வளா்ந்தாா்.
ஏற்கெனவே, நியூயாா்க் மாகாண பேரவையின் 36-ஆவது மாவட்ட தொகுதிக்கான உறுப்பினராக கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மம்தானி பொறுப்பு வகித்துவருகிறாா்.

