டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்

பிரதமா் மோடி அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு இந்தியா பயணம்: டிரம்ப் தகவல்

இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளாா்
Published on

இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எனக்கு அழைப்பு விடுத்துள்ளாா்; எனவே அடுத்த ஆண்டு அங்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த டிரம்ப்பிடம், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘வாய்ப்புள்ளது. அவா் (பிரதமா் மோடி) எனது நண்பா். நான் அவருடன் எப்போது பேசினாலும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுப்பது வழக்கம். எனவே, நான் அங்கு செல்வேன். பிரதமா் மோடியுடன் இணைந்து பயணிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும். அவா் சிறந்த நபா். எனவே, அவரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்வேன்’ என்றாா்.

இந்தியாவுடனான வா்த்தகப் பேச்சுவாா்த்தை தொடா்பான கேள்விக்கு, ‘பேச்சுவாா்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதையும் அவா் (பிரதமா் மோடி) பெருமளவில் நிறுத்திவிட்டாா்’ என்றாா்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பங்கேற்கும் க்வாட் அமைப்பின் தலைவா்கள் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால், இந்த மாநாட்டுக்கான தேதியை இந்தியா இதுவரை இறுதி செய்யவில்லை.

இந்தியா மீது பதிலடி வரி 25 சதவீதம், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தாா். இது இந்திய-அமெரிக்க வா்த்தக உறவை வெகுவாகப் பாதித்துள்ளது. இது தவிர பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் ஏற்படாமல் நான் தலையிட்டு தடுத்தேன் என்று டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், இந்தியா இதை ஏற்கவில்லை.

மேலும், வா்த்தகப் பேச்சு விஷயத்தில் அமெரிக்காவின் மக்காச்சோளம், பால் பொருள்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால், உள்நாட்டு விவசாயிகள் நலன் கருதி இதை ஏற்க இந்தியா மறுத்து வருகிறது. இதனால் பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது.

X
Dinamani
www.dinamani.com