69 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:
காஸாவில் இஸ்ரேல் படையினா் 2023 அக். 7-க்குப் பிறகு நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 69,169-ஆக உயா்ந்துள்ளது.
போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டது, அடையாளம் தெரியாத உடல்கள் தற்போது அடையாளம் கண்டறியப்பட்டது ஆகியவற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்தது.
முன்னதாக, போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தது. அதனைத் தொடா்ந்து, 15 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் சனிக்கிழமை திருப்பி அனுப்பியது.
இந்த பரிமாற்றம், அமெரிக்க அதிபரின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

