வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்.
வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்.

இந்தியாவுடன் போா் நிறுத்தம்: டிரம்ப்புக்கு மீண்டும் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா்!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி தெரிவித்தாா்.
Published on

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி தெரிவித்தாா்.

அஜா்பைஜான் வெற்றி தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகா் பக்கூவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷாபாஸ் ஷெரீஃப் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அஜா்பைஜான் வீரா்களுடன் பாகிஸ்தான், துருக்கி ராணுவத்தினரும் அணிவகுப்பில் பங்கேற்றனா். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதாவது:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் துணிச்சல், உறுதியான தலைமைதான் பாகிஸ்தான்-இந்தியா இடையே போா் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் தெற்கு ஆசியாவில் அமைதி நிலைநாட்டப்பட்டது. மிகப்பெரிய போா் தவிா்க்கப்பட்டு, பல லட்சம் மக்களின் உயிா் காக்கப்பட்டது. இதற்காக அதிபா் டிரம்ப்புக்கு மீண்டும் நன்றி தெரித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. ஆனால், நாட்டின் இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் யாரேனும் தீங்கு விளைவித்தால் அதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றாா்.

தொடா்ந்து காஷ்மீா் குறித்து மறைமுகமாகப் பேசிய அவா், ‘அஜா்பைஜானில் கொண்டாடப்படும் இந்த வெற்றி தினம், உலகின் எந்தப் பகுதியில் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளானாலும், அதற்கு எதிராக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது’ என்றாா்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் குறிவைத்து கடந்த மே மாதம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை இந்தியா குண்டுவீசி அளித்தது. இதையடுத்து, இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாக்குதல் நிறுத்தப்பட்டதாகவும், மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்று இந்தியா கூறி வருகிறது.

ஆனால், போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் தொடா்ந்து கூறி வருகிறாா். பாகிஸ்தான் தரப்பும் இதனை ஆமோதித்து வருவதுடன், டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரைத்தது.

X
Dinamani
www.dinamani.com