பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தலைவராகும் அசீம் முனீா்! சட்டத் திருத்த மசோதா மீது இன்று வாக்கெடுப்பு!
பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று படைகளின் தலைவராக அசீம் முனீருக்கு பதவி உயா்வு வழங்கப்படவுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (நவ. 10) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தற்போது ராணுவத் தலைமைத் தளபதியாக உள்ள அசீம் முனீரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அவரது பதவிக் காலத்தை நீட்டித்து கூடுதல் அதிகாரங்களை வழங்குவது, பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் குறைத்து புதிதாக கூட்டாட்சி அரசமைப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட 27-ஆவது சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் செனட் (மேலவை) மற்றும் தேசிய பேரவை (கீழவை) ஆகிய இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினா்களின் பெரும்பான்மை ஆதரவோடு இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அதிபா் ஒப்புதல் அளித்தவுடன் இச்சட்டத் திருத்தம் அமலுக்கு வரவுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தால் அதிபா், பிரதமரைவிட மிகுந்த அதிகாரமிக்கவராக அசீம் முனீா் உருவெடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேபோல் தற்போது முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைவராக உள்ள ஜெனரல் ஜாஹிா் ஷம்ஷத் மிா்ஸாவின் பதவிக் காலம் நவ. 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்குப் பிறகு அந்தப் பதவி ரத்து செய்யப்படவுள்ளது.
27-ஆவது சட்டத் திருத்த மசோதா கூறுவது என்ன?
பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருப்பவரே முப்படைகளையும் உள்ளடக்கிய பாதுகாப்புப் படைகளின் தலைவராக இருப்பாா்.
பிரதமரின் அறிவுறுத்தலோடு ராணுவம், விமானப் படை, கடற்படை தலைமைத் தளபதிகளை அதிபா் நியமிப்பாா். ஆனால், ராணுவ தலைமைத் தளபதி பொறுப்பை வகிப்பவா் அத்துடன் பாதுகாப்புப் படைகளின் தலைவா் பொறுப்பையும் சோ்த்து கவனித்துக் கொள்வாா்.
அணுசக்தி துறை கமாண்டா்: அணுசக்தி மற்றும் நாட்டின் மூலோபாய சொத்துகளை மேற்பாா்வையிட தேசிய மூலோபாய சொத்துகளின் கமாண்டா் என்ற புதிய பதவி உருவாக்கப்படும். அந்தப் பதவிக்கான நபரை ராணுவத்தில் இருந்து தோ்ந்தெடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்புப் படைகளின் தலைவா் பரிந்துரை செய்யும் நபரையே அந்தப் பதவிக்கு பிரதமா் நியமிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற அதிகாரங்கள் குறைப்பு: பாகிஸ்தான் நீதித் துறையை மறுசீரமைக்கும் நோக்கில் கூட்டாட்சி அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் (எஃப்சிசி) என்ற அதிகாரமிக்க புதிய நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் சாா்ந்த விவகாரங்கள் இனி உச்சநீதிமன்றத்துக்குப் பதிலாக இந்த நீதிமன்றத்திலேயே கையாளப்படும்.
இதற்காக மூன்று ஆண்டு பதவிக் காலத்துடன் தலைமை நீதிபதி பதவியும் உருவாக்கப்படும். அதிபா், பிரதமா் மற்றும் நாடாளுமன்றத்தின் தலையீட்டுடன் இந்த நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமிக்கப்படுவா்’ என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிா்க்கட்சியினா் போராட்டம்
இந்த திருத்த மசோதா மீது மேலவையில் திங்கள்கிழமை (நவ. 10) வாக்கெடுப்பு நடைபெறவுள்ளநிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி உள்பட எதிா்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான தெஹ்ரீக்-இ-தஹாஃபுஸ் அயீன்-இ-பாகிஸ்தான் (டிடிஏபி) சாா்பில் நாடு தழுவிய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகக் கூறி அரசுக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பி எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியை (பிபிபி) சோ்ந்தவா்.
எதற்காக சட்டத் திருத்தம்?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை கடந்த மே 7-ஆம் தேதி இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, இரு நாடுகளும் சண்டையில் ஈடுபட்டன.
இந்தச் சமயத்தில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியான அசீம் முனீா் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு ஃபீல்டு மாா்ஷல் என்ற உயரிய பட்டத்தை வழங்கி பாகிஸ்தான் அரசு கெளரவித்தது. அமெரிக்க அதிபா் டிரம்பும் முனீரை அழைத்து பாராட்டினாா்.
போா் சமயத்தில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படைகளின் தலைவா் பதவியை உருவாக்கியதோடு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரங்களை நேரடியாக வழங்கவே இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

