

அமெரிக்கா முன்னிலையில் கம்போடியாவுடன் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாக தாய்லாந்து எச்சரித்துள்ளது.
கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டின் நான்கு வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து தாய்லாந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
எல்லையில் வீரர்கள் காயமடைந்த விவகாரத்தில் தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மோதல், நான்கு நாள்களுக்கு போராக வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர்.
அதையடுத்து, அமெரிக்க மத்தியஸ்தத்தின் பேரில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன.
இந்த நிலையில், கம்போடியாவையொட்டிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிசாகெட் மாகாணத்தில் கண்ணிவெடி வெடித்து நான்கு வீரர்கள் காயமடைந்ததாக தாய்லாந்து ராணுவம் திங்கள்கிழமை கூறியது. அதில், கண்ணிவெடி மீது கால் வைத்த வீரர் காலை இழந்தார். மற்ற மூவருக்கும் லேசமான காயம் ஏற்பட்டது.
தாய்லாந்து படையினர் வழக்கமாக ரோந்து செல்லும் அந்தப் பகுதியில் கண்ணிவெடி வைப்பது போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிரானது. எனவே, தாய்லாந்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்பவை அந்த ஒப்பந்த அமலாக்கம் நிறுத்திவைக்கப்படும் என்று தாய்லாந்து பிரதமர் அனுதின் சரண்விராகுல் எச்சரித்துள்ளார்.
11-ஆம் நூற்றாண்டு ஹிந்து கோயில் அமைந்துள்ள ப்ரே விஹேர் பகுதியை மையமாகக் கொண்டு தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.