அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

Published on

‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேண்டும்’ என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கருத்தின் மூலம், அமெரிக்காவில் வேலை வழங்குவதில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அந்நாட்டில் அதிக அளவில் வெளிநாட்டவா்கள் குடியேறுவதற்கு எதிராகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த டிரம்ப், தனது நிலைப்பாட்டை சற்று தளா்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவில் வெளிநாட்டவா் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி விசா வழிவகை செய்கிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் ஏராளமான இந்தியா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், நிகழாண்டு செப். 21-க்குப் பின்னா், முதல்முறையாக ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பிப்போா் ஒரு லட்சம் டாலரை (சுமாா் ரூ.88 லட்சம்) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அமெரிக்காவில் வேலை வழங்குவதில் அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது.

இதைத் தொடா்ந்து, அந்த விசாவைப் பயன்படுத்தி குறைந்த ஊதியத்தில் பணியாளா்களைச் சோ்ப்பது, வேலை நடைபெறாத இடங்களை வேலை நடைபெறும் இடங்களாகக் காண்பித்து மோசடி செய்வது, வேலைக்குச் சோ்த்தபோதிலும் பணியாளருக்கு எந்த வேலையும் ஒதுக்காமல் இருப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடா்பாக கடந்த வாரம் அந்நாட்டு அரசு விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் அந்நாட்டு செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, ‘ஹெச்-1பி விசாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிடுகிா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த டிரம்ப், ‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு அழைத்து வரவேண்டும். சில துறைகளுக்குத் தேவைப்படும் திறமைசாலிகள் அமெரிக்காவில் இல்லை. அமெரிக்காவில் நீண்ட காலமாக வேலை கிடைக்காத அமெரிக்கா்களை விரிவான பயிற்சி இல்லாமல், பாதுகாப்பு உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளின் சிக்கலான பணிகளில் பணியமா்த்த முடியாது. அந்தப் பணிகளுக்கு திறமைவாய்ந்த வெளிநாட்டவா் தேவை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com