

அமெரிக்காவில் மெனோபாஸ் அறிகுறிகளைத் தணிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் உள்ள எச்சரிக்கை லேபிளை நீக்குவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் மேலாண்மை (எஃப்டிஏ - FDA - Food and Drug Administration) அமைப்பு அறிவித்துள்ளது.
மெனோபாஸ் மருந்துகளினால் பக்கவாதம், இதய நோய், மறதி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து மருந்து உறைகளில் ஒட்டப்படும் லேபிள் இனி இருக்காது என்று அறிவித்துள்ளது.
மெனோபாஸ்
பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதே மெனோபாஸ். இது ஒவ்வொருவரைப் பொருத்தும் மாறுபடுகிறது. பொதுவாக 45 வயதுக்கு மேல் 55 வயதுக்குள்ளாக நடக்கலாம். மெனோபாஸ் சமயத்தில் அல்லது அதற்கு முன்னதான ப்ரீ-மெனோபாஸ் நேரத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு, அதிகமாக வியர்த்தல், தூக்கமின்மை, இதயத் துடிப்பு, மார்பக வலி, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ப சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவில் மெனோபாஸ்
அமெரிக்காவில் பெண்களுக்கு சராசரியாக 50 - 51 வயதில் மெனோபாஸ் நிகழ்வதாக கூறப்படுகிறது. மெனோபாஸ் நேரத்தில் பெண்கள் அதன் அறிகுறிகளால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மெனோபாஸுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் பிற உடல் கோளாறுகளுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
மாதவிடாயை நிறுத்த அல்லது மெனோபாஸ் ஏற்படும் சமயத்தில் ஹார்மோன் தெரபி போன்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது அமெரிக்க பெண்கள் மத்தியில் குறைந்துள்ளது.
ஏனெனில் மெனோபாஸ் மருந்துகள் பலவற்றிலும், அதனைப் பயன்படுத்தினால் இதய நோய், பக்கவாதம், மறதி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஆபத்து எச்சரிக்கையினால் பலரும் மெனோபாஸுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தயங்குகின்றனர்.
ஹார்மோன் தெரபி சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என குழப்பம், பதட்டம் நீடித்து வருகிறது.
மேலும், மெனோபாஸ் மற்றும் அதன் அறிகுறிகளால் அங்கு பெண்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் பலரும் வேலையைவிட்டு விலகுகின்றனர் அல்லது அலுவலக வேலையைச் சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றனர்.
ஆய்வுகளும் முடிவுகளும்
தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை ஆய்வுகளின்படி, 1999 ஆம் ஆண்டில் பெண்களில் 4ல் ஒருவர் (26.9%) ஹார்மோன் சிகிச்சையைப் பயன்படுத்தினர். 2020 மார்ச்சில் இந்த விகிதம் 4.7% ஆக (20 பெண்களில் ஒருவர்) குறைந்துள்ளது.
இதற்கு காரணம் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள். அதாவது பெண்கள் ஹார்மோன் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும்போது இதய நோய், மறதி ஆகியவற்றுக்கு ஆளாவதாகத் தெரிவித்தது. இந்த முடிவுகளால் பெண்கள் மெனோபாஸுக்கு ஹார்மோன் சிகிச்சை எடுக்கத் தயங்கினர்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு பெண்கள் மெனோபாஸ் சமயத்தில் ஹார்மோன் தெரபி மற்றும் அறிகுறிகளைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பொருட்டு மெனோபாஸுக்கான 20-க்கும் மேற்பட்ட மருந்துகளில் இருக்கும் எச்சரிக்கை பதிவை நீக்குவதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த லேபிளை அகற்றுவதன் மூலமாக பெண்கள் மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்க ஹார்மோன் சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ள முன்வருவார்கள் என்று கூறப்படுகிறது.
மெனோபாஸ் மருந்துகளில் உள்ள எச்சரிக்கை பதிவுகளை நீக்குவது மட்டுமின்றி மெனோபாஸுக்கான ஹார்மோன் சிகிச்சைகள் மற்றும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டின் ஹார்மோன்களைக் கொண்ட பல்வேறு மருந்துகளை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
2002 தரவுகளின் அடிப்படையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய ஆய்வில் ஈஸ்ட்ரோஜன் மருந்துகளை உட்கொள்ளும் 50 வயதுடைய பெண்கள், மெனோபாஸுக்குப் பிறகு இதயம் தொடர்பான ஆபத்துகள் குறைவாக இருப்பதாக கூறுகிறது. அதேநேரத்தில் 60 வயதுடைய பெண்களுக்கான தரவுகள் இல்லை, 70 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
அதாவது 60 வயதுக்கு குறைவான பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குள் ஹார்மோன் தெரபி சிகிச்சை எடுத்தால் ஆபத்துகள் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஏற்கனவே இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட உடல் கோளாறுகளை கொண்ட பெண்கள் இந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மருத்துவர்களின் பரிந்துரைப்படியே அந்த மருந்துகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
2000 ஆண்டுகளில் இருந்து பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளுக்கு அங்கு பல வடிவில் புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மாத்திரைகள், பேட்ச்சுகள், குறைந்த ஹார்மோன் அளவுள்ள யோனி கிரீம்கள், மாத்திரைகள் ஆகியன.
இந்த லேபிள் காலாவதியானது, தேவையற்றது என்று கூறிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் ஆணையர் மார்டி மகரி, பெண்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணவும் பணியிடத்தில் பலரும் தங்கள் வேலையைத் தொடர இது உதவும் என்றும் கூறுகிறார்.
இந்த மாற்றத்தை சில மருத்துவர்கள் ஆதரிக்கின்றனர். ஏனெனில் மெனோபாஸின்போது ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்ய சிகிச்சை எடுத்துக்கொள்வது அதிகரிக்கும்.
அதே நேரத்தில் இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த தெளிவில்லை என மற்றொரு சாரார் கவலைப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.