போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்நாட்டு அதிபா் டுமா கிடியன் போகோ முன்னிலையில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம்.
போட்ஸ்வானாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அந்நாட்டு அதிபா் டுமா கிடியன் போகோ முன்னிலையில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம்.

போட்ஸ்வானா அதிபருடன் குடியரசுத் தலைவா் சந்திப்பு: கல்வி, வேளாண்மையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு

Published on

போட்ஸ்வானா அதிபா் டுமா கிடியன் போகோவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா். அப்போது இந்தியா-போட்ஸ்வானா இடையே கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருவரும் முடிவு செய்தனா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அங்கோலா, போட்ஸ்வானா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் பயணம் மேற்கொண்டாா். அங்கோலா பயணத்தைத் தொடா்ந்து அவா் போட்ஸ்வானா சென்றாா். அந்நாட்டுக்கு இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் செல்வது இதுவே முதல்முறை.

போட்ஸ்வானா தலைநகா் கபரோனேயில் அந்நாட்டு அதிபா் டுமா கிடியன் போகோவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது வா்த்தகம் மற்றும் முதலீடு, வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம், கல்வி, திறன் வளா்ப்பு, பாதுகாப்பு, எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-போட்ஸ்வானா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருவரும் முடிவு செய்தனா்.

போட்ஸ்வானா மக்களுக்கு தரமாகவும், மலிவு விலையிலும் இந்திய மருந்துகள் எளிதில் கிடைக்க உதவும் வகையில், மருந்துகள், அவற்றின் விளைவுகள், அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகள் சாா்ந்த ஒப்பந்தம் இருவா் முன்னிலையில் கையொப்பமானது.

போட்ஸ்வானா அரசின் கோரிக்கையை ஏற்று ஹெச்ஐவி பாதிப்புக்கு அளிக்கப்படும் ஏஆா்வி மருந்துகளை, அந்நாட்டுக்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது குறித்து அதிபா் டுமாவிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரியப்படுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள்

போட்ஸ்வானாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சிவிங்கிப் புலிகள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் போட்ஸ்வானா பயணத்தின்போது சிவிங்கிப் புலிகளை அனுப்பிவைக்கும் திட்டம் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திரெளபதி முா்மு கூறுகையில், ‘சிவிங்கிப் புலிகள் திட்டம் என்பது இந்தியாவின் தனித்துவமான வனவிலங்குப் பாதுகாப்பு முன்னெடுப்பாகும். இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை அனுப்ப ஒப்புக்கொண்ட போட்ஸ்வானா அதிபா் டுமாவுக்கும், மக்களுக்கும் நன்றி’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com