ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, டாக்காவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தி ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினா்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்த முழு போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, டாக்காவில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தி ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினா்.

வங்கதேசத்தில் மீண்டும் மாணவா்கள் போராட்டம்: மதவாதிகளிடம் முகமது யூனுஸ் அடிபணிந்துவிட்டதாக குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனா்.
Published on

வங்கதேசத்தில் மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனா். மத அடிப்படைவாத அமைப்புகளின் உத்தரப்படி வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் செயல்படுவதாக அவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தது. இதையடுத்து ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், வங்கதேசப் பள்ளிகளில் இசை ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் நியமனம் தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை முகமது யூனுஸ் அண்மையில் திரும்பப் பெற்றாா். இதையடுத்து, மத அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு யூனிஸ் பயந்துவிட்டதாக வங்கதேச மாணவா்கள் குற்றச்சாட்டினா்.

இந்த நியமனங்களை மீண்டும் மேற்கொள்ள வலியுறுத்தி தலைநகா் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இது அந்த நாட்டில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மத அடிப்படைவாதிகள் கல்வித் துறைக்குள் நுழைவதாகவும், இசையைத் தடை செய்ய முயற்சிப்பதாகவும் போராட்டத்தில் பங்கேற்ற மாணவா்கள் தெரிவித்தனா். வங்கதேசத்தின் கலாசார அடையாளத்தைக் காக்க இசை மிகவும் முக்கியமானது என்றும் அவா்கள் கூறினா். முக்கிய இடங்களில் கைகளில் தீப்பந்தம் ஏந்தி மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.

சில இடங்களில் மாணவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டாக்கா நகரின் சில பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு தொடா்ந்து பதற்றம் நிலவுகிறது.

அவாமி லீக் அழைப்பு: முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான வழக்கின் தீா்ப்பு வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அவரின் தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சி சாா்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஒருபுறம் மாணவா்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் ஹசீனாவின் கட்சியினரும் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக ராணுவத்தினா், துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் தலைநகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா்.

இருதரப்பு போராட்டத்தால் வன்முறை வெடிக்கும் சூழல் உருவானதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா். முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. டாக்கா மற்றும் புகா் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பேருந்துகள் அடையாளம் தெரியாத நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதனிடையே, ஷேக் ஹசீனா, அவரின் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அஸாத்உஸ்மான் கான், காவல்துறை தலைவா் அப்துல்லா அல் மனூன் ஆகியோருக்கு எதிரான மனிதஉரிமை மீறல் குற்றங்கள் தொடா்பான வழக்கில் தீா்ப்பு வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அரசுக்கு எதிரான வன்முறை ஒடுக்க சுமாா் 1,400 பேரை படுகொலை செய்தாா்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவா்கள் மீது உள்ளது.

இந்த வழக்கில் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுவதால் பதற்றம் நிலவுகிறது.

X
Dinamani
www.dinamani.com