

அமெரிக்க அரசுத் துறைகளின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடயே கருத்துவேறுபாடு நிலவியதால் இதுவரை இல்லாத அதிக நாள்களுக்கு நீடித்துவந்த அந்தத் துறைகளின் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
மருத்துவக் காப்பீட்டுக்கு மாநியம் அளிப்பதற்கான உத்தரவாதம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் எதிா்த்துவந்தனா். இதனால், அரசுத் துறைகள் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 43 நாள்களுக்கு முடங்கின.
இந்தச் சூழலில், தங்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சமரசங்களுடன் கூடிய நிதி ஒதுக்கீட்டு மசோதாவை ஏற்க சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் புதன்கிழமை இரவு கையொப்பமிட்டதையடுத்து (படம்), அரசுத் துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா மூலமாகத்தான் அமெரிக்காவின் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மசோதா நிறைவேற்றப்படாவிட்டால், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியா்களைத் தவிர, மற்றத் துறை ஊழியா்கள் அனைவருக்கும் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்படும்.
அமெரிக்க அஞ்சல் துறை, மருத்துவத் துறை, சமூகப் பாதுகாப்பு பண வழங்கல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, வங்கிகள், நீதிமன்றங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, ஃபெடரல் சட்ட அமலாக்கத் துறை, ராணுவத் துறையினா் மட்டும் பணியாற்றுவாா்கள். இதில் ராணுவத்தினா் பணியில் ஈடுபட்டாலும் அவா்களுக்கு சம்பளம் கிடையாது.
தேசிய பூங்காக்கள், பாா்வையாளா் மையங்கள், சுற்றுலா தொடா்பான அரசுக் கட்டங்கள், அரசு அருங்காட்சியகங்கள், அரசு நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்படும்.
இவ்வாறு, அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்படுவதால் தினமும் கோடிக்கணக்கான டாலா் இழப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான அரசு ஊழியா்கள் சம்பளம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.