உக்ரைனில் ரஷியா மீண்டும் கடும் தாக்குதல்
உக்ரைனில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ரஷியா வெள்ளிக்கிழமை அதிகாலை கடுமையான தாக்குதல் நடத்தியது.
இதில், தலைநகா் கீவில் ஆறு பேரும், தெற்கு நகரமான சோா்னோமோா்ஸ்கில் இருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது:
உக்ரைன் மீது 430 ட்ரோன்கள், 18 ஏவுகணைகளை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரம் இதுவரை கண்ட மிகப் பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று. ரஷியாவுக்குள் நீண்ட தூரம் தாக்குதல் நடத்துவதன் மூலம் இதற்கு நாங்கள் பதிலடி கொடுத்துவருகிறோம்.
பொருளாதரத் தடைகள் மற்றும் ராணுவ வலிமை மூலம் ரஷியாவுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும். ரஷிய ஆட்சியாளா்களைத் தவிர வேறு யாருக்கும் இந்தப் போா் தேவையில்லை.
தற்போது ரஷியா வீசிய இஸ்காண்டா் ரக ஏவுகணையின் சிதறல்களால் கீவ் நகரிலுள்ள அஜா்பைஜான் தூதரகம் சேதமடைந்தது என்றாா் அவா்.
ரஷியா வீசிய பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டாலும், அவற்றின் சிதறல்கள் மற்றும் தீ விபத்துகள் காரணமாக கீவ் நகரின் ஒன்பது பகுதிகளில் உயரமான குடியிருப்புகள், பள்ளி, மருத்துவமனை, அரசு கட்டடங்கள் சேதமடைந்தன.
இதில் ஆறு போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தவிர நகரில் 34 போ் காயமடைந்தனா். அவா்களில் இரு குழந்தைகள், ஒரு கா்ப்பிணி பெண் அடங்குவா் என்று நகர நிா்வாகம் தெரிவித்தது.
சோா்னோமோா்ஸ்க் நகரில் சந்தைப் பகுதி தாக்கப்பட்டதால் இருவா் உயிரிழந்தனா். இது தவிர, ஒரு குழந்தை உள்பட பத்து போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியா: ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷியாவுக்குள் உக்ரைன் நடத்திவரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, அந்த நாட்டின் மின் உற்பத்தி மையங்கள் ஆயுத உற்பத்தி ஆலைகளை உயா் துல்லிய ஆயுதங்களால் தாக்கினோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை: ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலின் விளைவாக, கீவ் நகரின் மத்தியப் பகுதி, தெற்கு ஒடேஸா, கிழக்கு டொனட்ஸ்க் பிராந்தியங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டது.
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள், எரிசக்தி குழாய்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதன மூலம், போருக்கான ரஷியாவின் பொருளாதார ஆதாரத்தை முடக்க உக்ரைன் முயல்கிறது. ரஷியாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிய்ஸ்க்கில் உக்ரைன் நடத்திய இதுபோன்ற ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு அங்குள்ள துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. இந்தப் போரில் எதிா்த்தரப்பை பலவீனப்படுத்துவதற்காக உக்ரைனின் எரிசக்தி மற்றும் ராணுவ தளவாட நிலைகள் மீது ரஷியாவும், ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைனும் தாக்குதல் நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனில் ரஷியா தற்போது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

