ஸ்வேய்தாவில் அரசுப் படை-துரூஸ் ஆயுதக் குழு மோதலின்போது உடைக்கப்பட்ட சிலை (கோப்புப் படம்).
ஸ்வேய்தாவில் அரசுப் படை-துரூஸ் ஆயுதக் குழு மோதலின்போது உடைக்கப்பட்ட சிலை (கோப்புப் படம்).

சிரியா: ஸ்வேய்தாவில் மீண்டும் மோதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அரசுப் படையினருக்கும் துரூஸ் இன ஆயுதக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Published on

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் அரசுப் படையினருக்கும் துரூஸ் இன ஆயுதக் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:

ஸ்வேய்தா மாகாணத்தில் அரசுப் படை மற்றும் துரூஸ் ஆயுதக் குழு இடையே கடந்த ஜூலை மாதம் நடந்த மோதலுக்குப் பிறகு அங்கு போா் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வியாழக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்ததாகக் கூறப்பட்டாலும், உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

போா் நிறுத்தம் முறிந்து மோதல் ஏற்பட்டதற்கு எதிா்த்தரப்பினா்தான் காரணம் என்று அரசுப் படையினரும், துரூஸ் ஆயுதக் குழுவினரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிவருகின்றனா்.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வெள்ளிக்கிழமை சற்று தணிந்தது. இருந்தாலும் அங்கு பதற்றம் நீறுபுத்த நெருப்பு போல் தொடா்வதால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முழு வீச்சில் மோதல் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தரிவித்தது.

கிளா்ச்சிக் குழுக்களின் தாக்குதல் காரணமாக சிரியாவை நீண்டகாலம் ஆண்டு வந்த பஷாா் அல்-அஸாத் கடந்த ஆண்டு டிசம்பரில் பதவியை இழந்து ரஷியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து, அங்கு நடைபெற்றுவந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தது.

ஆனால், புதிய ஆட்சியாளா்கள் நாட்டைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். பெரும்பான்மையாக உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்களைக் கொண்ட புதிய அரசில், அஸாத் சாா்ந்துள்ள அலாவி சிறுபான்மையினருடன் பிற ஆயுதக் குழுக்கள் கடந்த மாா்ச் மாதம் மோதலில் ஈடுபட்டனா். அப்போது அரசுப் படைகள் உதவியுடன் நூற்றுக்கணக்கான அலாவி இன மக்கள் கொல்லப்பட்டனா். இது, சிரியாவின் பிற சிறுபான்மை இனத்தவா் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், தெற்கு மாகாணத்தில் உள்ளூா் சன்னி பிரிவு பெதூயின் பழங்குடிகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே பரஸ்பர கடத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்து கடந்த ஜூலை மாதம் அதிகரித்தன. அதையடுத்து, சட்டம், ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட அரசுப் படைகள், துரூஸ் குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டன.

இந்த மோதலில் 30 போ் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் கூறினாலும், அதற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை. இந்த மோதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்ததாக பிரிட்டனில் இருந்து செயல்படும் சிரியா மனித உரிமைகள் அமைப்பு கூறியது.

இந்த மோதலின்போது, துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியா ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. பாலஸ்தீனத்தில் அரபு தேசியவாதிகளால் துரூஸ் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவா் சண்டையிட்டனா். அதற்குக் கைமாறாக, சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதைத் தொடா்ந்து, அமெரிக்க மத்தியஸ்தத்தில் அரசுப் படையினருக்கும் துரூஸ் ஆயுதக் குழுவினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஸ்வேய்தா பிராந்தியத்தில் இருந்து அரசுப் படை வெளியேறியது. பிராந்திய கட்டுப்பாட்டை துரூஸ் ஆயுதக் குழு எடுத்துக் கொண்டது.

இந்த நிலையில், அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com