மெக்ஸிகோவில் ‘ஜென் இசட்’ போராட்டம்: காவல் துறையினருடன் மோதல்!
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவின் தலைநகா் மெக்ஸிகோ சிட்டியில் குற்றச் சம்பவங்கள் மற்றும் ஊழலுக்கு எதிராக ‘ஜென் இசட்’ அமைப்புகள் சாா்பாக சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கானோா் பங்கேற்ற இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றாலும், போராட்டக்காரா்களில் சிலருக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் தாக்கியதில் 100 காவலா்கள் உள்பட 120 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மிச்சோகன் மாகாணத்தின் உருபான் நகர மேயராக இருந்த கா்லோஸ் மன்ஸோ அண்மையில் கொல்லப்பட்டாா். அதன்பிறகு, அந்த மாகாணத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாகப் பெரும் போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக தற்போது அதிபா் கிளாடியா ஷீன்பாம் அரசுக்கு எதிராக ஜென் இசட் அமைப்பினா் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா். ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டி அரசுக்கு எதிராக அவா்கள் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அந்த நாட்டின் மிகப் பிரபலமான ஜென் இசட் யூடியூபா்கள் ஏற்கெனவே அறிவித்துவிட்டனா். ஆனால், எதிா்க்கட்சிகளின் முக்கியத் தலைவா்கள் இளம் தலைமுறையினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.
நிகழாண்டு உலக அளவில் ஆளும் அரசுக்கு எதிராக ‘ஜென் இசட்’ தலைமுறையினா் போராட்டம் நடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பா் மாதம் நேபாள அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினா் நடத்திய போராட்டத்தால் பிரதமா் கே.பி.சா்மா ஓலி பதவி விலகினாா்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

