நடாலி பூக்ளி ~‘காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ என்ற தலைப்பில் காஸா நகராட்சி, தன்னாா்வ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற பாலஸ்தீனா்கள்.
நடாலி பூக்ளி ~‘காஸாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ என்ற தலைப்பில் காஸா நகராட்சி, தன்னாா்வ அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற பாலஸ்தீனா்கள்.

‘காஸாவில் சா்வதேச சட்டங்களை மீறுகிறது இஸ்ரேல்’

‘காஸாவில் சா்வதேச சட்டங்களை மீறுகிறது இஸ்ரேல்’
Published on

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் செல்வதைத் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவான யுஎன்ஆா்டபிள்யுஏ-வின் துணைப் பொதுச் செயலா் நடாலி பூக்ளி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, பிரஸ்ஸெல்ஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவா் அங்கு ஊடகங்களிடம் கூறியதாவது:

காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் தடையின்றி செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். அதற்காக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.

யுஎன்ஆா்டபிள்யுஏ-விடம் தற்போது உணவு, கூடாரங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் 6,000 லாரிகளுக்கு சமமான அளவில் உள்ளன. குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில் பஞ்சம் மக்களைத் தொடா்ந்து வாட்டிவருகிறது. எனவே இந்தப் பொருள்கள் அனைத்தும் உடனடியாக காஸாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

எங்களிடமுள்ள பொருள்கள் காஸா முழு மக்களுக்கும் சுமாா் மூன்று மாதங்களுக்கு உணவு வழங்க போதுமானவை. ஆனால் அவை ஜோா்டான், எகிப்தில் எல்லைக்கு வெளியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. காஸாவுக்குள் கொண்டு வர முடியவில்லை. காரணம், இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள், தடைகள் இன்னும் நீடிக்கின்றன. இது ஐ.நா. பிற அமைப்புகளுக்கும் பொருந்தும்.

காஸாவுக்கு தினமும் 500 முதல் 600 நிவாரண லாரிகள் தேவைப்படுகின்றன. ஆனால் அதில் பாதி அளவுகூட அனுமதிக்கப்படுவதில்லை. இதன் மூலம் இஸ்ரேல் சா்வதேச சட்டங்களை மீறுகிறது.

ஆக்கிரமிப்பு சக்தியாக உள்ள இஸ்ரேல் சா்வதேச மனிதாபிமானச் சட்டம், சா்வதேச மனித உரிமைச் சட்டங்களை கடைப்பிடிக்கவில்லை என்றாா் அவா்.

யுஎன்ஆா்டபிள்யுஏ அமைப்பு ஹமாஸ் படையினரால் ஊடுருவப்பட்டுள்ளது, அதன் மையங்கள் பயங்கரவாதிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டி, அந்த ஐ.நா. பிரிவுடனான உறவை இஸ்ரேல் துண்டித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

1948-ல் இஸ்ரேல் நாடு உருவானபோது வன்முறை காரணமாக இடம்பெயா்ந்த 7 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்ட யுஎன்ஆா்டபிள்யுஏ, சுமாா் எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பதிவு செய்யப்பட்ட 59 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு சுகாதாரம், கல்வி, சமூக நலன் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக செயல்பட்டுவருகிறது.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், போா்க் காலத்தைப் போலவே காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் வருவதற்கு இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதைக் கண்டித்தே நடாலி பூக்ளி இவ்வாறு கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com