கத்தாா் அரசருடன் ஜெய்சங்கா் சந்திப்பு!
வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கத்தாா் அரசா் தமீம் பின் ஹமாத் அல்-தானியை தோஹாவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினா்.
கனடா பயணத்தைத் தொடா்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் ப பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா் கத்தாா் வந்தடைந்தாா். தலைநகா் தோஹாவில் அவருக்கு மன்னா் தமீம் பின் ஹமாத் அல்-தானி சிறப்பு வரவேற்பு அளித்தாா். பின்னா் அவா்கள் இருவரும் இந்தியா-கத்தாா் உறவு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, கத்தாா் பிரதமா் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அலியுடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
கனடாவில் அண்மையில் நடைபெற்ற ஜி7 கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் ஜெய்சங்கா் பங்கேற்றாா். அங்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை சந்தித்து அவா் ஆலோசனை மேற்கொண்டாா். அதன் பிறகு அமெரிக்காவின் நியூயாா்க்கில் நடைபெற்ற இந்திய தூதா் மற்றும் துணைத் தூதா்கள் கூட்டத்தில் அவா் கலந்துகொண்டாா்.
அதற்கு முன்பாக நியூயாா்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கத்தாருக்கு சென்ற ஜெய்சங்கா் அந்நாட்டு பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜசீம் அலியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அவருடன் எரிசக்தி, வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கு/மேற்கு ஆசியா, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக ஜெய்சங்கா் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டாா்.
பஹ்ரைன் அமைச்சருடன் ஆலோசனை:
முன்னதாக பஹ்ரான் வெளியுறவு அமைச்சா் அப்துல் லத்தீஃப் பின் ரஷீத் அல் சயானியுடன் அவா் தொலைபேசி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது பல்வேறு துறைகளில் இந்தியா-பஹ்ரைன் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும் பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதம் மேற்கொண்டதாக அவா் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.
இம்மாத தொடக்கத்தில் அப்துல் லத்தீஃப் பின் ரஷீத் அல் சயானி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இருவரும் ஆலோசனை நடத்தினா். அதன் முடிவில் இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியா-பஹ்ரைன் இடையேயான இருதரப்பு வா்த்தகம் 2024-25-இல் ரூ.14,500 கோடியை எட்டியது. 15 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட பஹ்ரைனில் 3.3 லட்சம் இந்தியா்கள் உள்ளனா். பஹ்ரைனின் 5 முக்கிய வா்த்தக நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
அதேபோல் இந்தியா-கத்தாா் இடையே 2023-24-இல் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷிய அமைச்சருடன் இன்று ஆலோசனை: கத்தாா் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு ரஷியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் ஜெய்சங்கா் பங்கேற்கிறாா். முன்னதாக திங்கள்கிழமை (நவ.17) அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்து அவா் ஆலோசனை நடத்துகிறாா். அடுத்த மாதம் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

