யுரேனியம் செறிவூட்டப்படவில்லை: ஈரான் வெளியுறவு அமைச்சா் விளக்கம்!
‘ஈரானில் உள்ள எந்தவொரு தளத்திலும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளாா்.
சா்வதேச செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்ஸின்’ செய்தியாளா் ஒருவா் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘தற்போதைய நிலையில், எங்கள் நாட்டின் எந்தவொரு தளத்திலும் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை. எங்களது அணுசக்தித் தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதே இதற்குக் காரணம். மேலும், எங்களின் அனைத்துத் தளங்களும் சா்வதேச அணுசக்தி முகமையின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் உள்ளன’ என்றாா்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடா்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், ஈரான் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் மின்சார உற்பத்தி மற்றும் குடிமக்களுக்கான அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறி வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அணுசக்தித் திட்டம் தொடா்பாக ஈரான் அரசிடமிருந்து வெளிவந்த முதல் நேரடி விளக்கம் இதுவாகும்.

