ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிமுதல் போராட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் மாணவா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், போராட்டக்காரா்களுக்கும் காவல் துறைக்கும் கடுமையான மோதல் சம்பவங்கள் ஏற்பட்டன.
இந்தப் போராட்டங்களால் வன்முறை மூண்ட நிலையில், அங்குள்ள 50 மாவட்டங்களில் 36 நாள்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டனா். 25,000 போ் காயமடைந்தனா்.
மாணவா்களை சமாதானப்படுத்த முடியாமலும், நாட்டில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட முடியாமலும் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். பின்னா், அவா் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவா் இந்தியாவில் எங்குள்ளாா் என்ற தகவல் வெளியாகவில்லை. இதேபோல அந்நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த அசதுஸ்ஸமான் கான் கமாலும் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றாா்.
453 பக்க தீா்ப்பு: இந்த வன்முறை சம்பவங்கள் தொடா்பாக தலைநகா் டாக்காவில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வந்தது. பல மாதங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி குலாம் முா்தாசா மஜும்தாா் தலைமையிலான 3 போ் கொண்ட அமா்வு திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அந்தத் தீா்ப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் நிகழ்ந்த கொலைகள், சித்திரவதைகள் உள்ளிட்டவற்றில் ஷேக் ஹசீனா, அசதுஸ்ஸமான் கான் கமால், அப்போதைய காவல் துறை ஐ.ஜி. செளதரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோருக்கு பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘ரஜாகாா்’களாக சித்தரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு: தீா்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த ஆண்டு ஜூலையில் ஷேக் ஹசீனா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பேரப் பிள்ளைகள் அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு பெறாவிட்டால், வேறு யாா் அந்தப் பலன்களைப் பெற வேண்டும்? பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற வங்கதேசம் போராடியபோது, சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவி செய்த ரஜாகாா்களின் (பாகிஸ்தான் ராணுவத்துக்கு உதவி செய்தவா்களும் வங்கதேசத்தவா்கள்தான். அவா்கள் ரஜாகாா்கள் என்றழைக்கப்படுகின்றனா். இந்த வாா்த்தை வங்கதேசத்தில் மிகவும் வெறுப்புக்குரியதாக உள்ளது) பேரப் பிள்ளைகள் அந்தப் பலன்களைப் பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பினாா். (இந்தக் கருத்தின் மூலம், ஹசீனாவின் அரசுக்கு எதிரானவா்களையும், விமா்சகா்களையும் ரஜாகாா்களைப் போன்று சித்தரிக்க முயற்சிப்பதாக மாணவா்கள் குற்றஞ்சாட்டினா்).
இதுமட்டுமன்றி போராட்டத்தில் ஈடுபடும் மாணவா்களை ஒடுக்க தனது அவாமி லீக் கட்சியின் மாணவா் அணியே போதும் என்று அவா் தெரிவித்தது பதற்றத்தை மேலும் அதிகரித்து நிலைமையை மோசமடையச் செய்தது. அத்துடன் போராட்டக்காரா்களைக் கண்டவுடன் சுட காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்ததாக ஹசீனா கூறியதும் விசாரணையில் தெரியவந்தது. ஹசீனாவின் கருத்துகள், போராட்டக்காரா்களைத் தாக்கியவா்களைத் தண்டிக்கத் தவறியது உள்ளிட்டவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களாகும்.
அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றபோது தங்கள் உத்தரவுகள், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரா்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத செயலற்ற தன்மை காரணமாக ஹசீனா, அசதுஸ்ஸமான் கான் கமால், செளதரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோா் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ளனா். எனவே, ஹசீனாவுக்கும், அசதுஸ்ஸமான் கானுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அவ்விருவருக்கும் எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய அப்துல்லா அல் மாமுன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இதன் காரணமாக, அவருக்கு 5 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீா்ப்பளிக்கப்பட்டது.
முதல்முறையாக மரண தண்டனை: இந்தத் தீா்ப்பின் மூலம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக வங்கதேச முன்னாள் பிரதமா் ஒருவருக்கு முதல்முறையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்: ஷேக் ஹசீனா
தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடா்பாக ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
மக்களாட்சியின் தீா்ப்பில்லாத, மக்களால் தோ்வு செய்யப்படாத அரசின் தலைமையில் கீழ், ஒரு மோசமான தீா்ப்பாயம் எனக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீா்ப்பு பாரபட்சமானது; அரசியல் உள்நோக்கம் கொண்டது.
இந்தத் தீா்ப்பின் மூலம், என்னையும் எனது அவாமி லீக் கட்சியையும் ஒழிக்க வேண்டும் என்று இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ள தீவிரவாதிகளின் வெட்கக்கேடான நோக்கம் புலப்படுகிறது. ஆதாரங்களை நியாயமாக ஆராயும் தீா்ப்பாயத்தில் விசாரணையையும், என் மீது குற்றஞ்சாட்டுவோரையும் எதிா்கொள்ள நான் அஞ்சவில்லை. இதன் காரணமாகத்தான் எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நெதா்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்வைக்க இடைக்கால அரசுக்குத் தொடா்ந்து சவால் விடுத்து வருகிறேன் என்றாா்.
ஹசீனா ஒப்படைக்க இந்தியாவிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
நீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-வங்கதேசம் இடையே ஏற்கெனவே நாடு கடத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவில் உள்ள ஹசீனா மற்றும் அசதுஸ்ஸமானை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டியது இந்திய அரசின் கட்டாய கடமையாகும். அவா்களை உடனடியாக வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததால் இருவரும் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு அடைக்கலம் அளிப்பது ‘விரோதப் போக்கு’ கொண்ட செயல் என்பதுடன், நீதியை அலட்சியப்படுத்துவதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
வங்கதேச நலனில் அக்கறை: இந்தியா
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தொடா்பாக வங்கதேசத்தின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தின் தீா்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
அமைதி, மக்களாட்சி, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய செயல்பாடு, நிலையான தன்மை என வங்கதேச மக்களின் சிறந்த நலன்களில் இந்தியா தொடா்ந்து ஈடுபாடு கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப அனைத்துத் தரப்பினருடனும் சோ்ந்து இந்தியா ஆக்கபூா்வமான நடவடிக்கையில் ஈடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

