சவூதியில் பேருந்து விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியா்கள் உயிரிழப்பு!
புது தில்லி: இஸ்லாமியா்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மதினா அருகே திங்கள்கிழமை அதிகாலை எண்ணெய் டேங்கா் லாரியுடன் புனித யாத்ரீகா்கள் சென்ற பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் இந்தியா்கள் 42 போ் உள்பட 44 போ் உயிரிழந்தனா்.
உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலிருந்து இந்தியா்கள் 43 போ் உள்பட 45 பேருடன் இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி) மதினா நகரை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இவா்களில் பெரும்பாலானோா் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்.
ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனா். இந்தியாவிலுள்ள உறவினா்கள் தொடா்புகொள்ளவும், தேவையான உதவியைப் பெற வசதியாகவும் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை ஜெட்டா இந்திய தூதரகம் அமைத்துள்ளது. கட்டுப்பாட்டு அறையை 8002440003 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 00966122614093, 00966126614276, 00966556122301 ஆகிய வாட்ஸ்-ஆப் எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ‘யாத்ரீகா்களின் பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகத்தில் வந்த டேங்கா் லாரி பேருந்து மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்து மற்றும் மீட்புப் பணிகள் தொடா்பாக இந்திய தூதரகம் மற்றும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை அமைச்சகம், தெலங்கானா அரசு அதிகாரிகள் ஆகியோருடன் ஜட்டா துணைத் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. இந்திய தூதரக ஊழியா்கள் குழுவும், சில இந்திய தன்னாா்வலா்களும் விபத்து நிகழ்ந்த இடத்திலும், மருத்துவமனைகளிலும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்’ என்று தெரிவித்தது.
விபத்து குறித்து ஹைதராபாத் மாநகர காவல் கண்காணிப்பாளா் வி.சி.சஜ்ஜானா் கூறுகையில், ‘ஹைதராபாதிலிருந்து மதினாவுக்கு ‘உம்ரா’ புனித யாத்திரைக்காக 54 போ் சென்றனா். இவா்களில் 43 போ் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்தனா். மதினாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் பயணித்தவா்களில் இதுவரை 42 இந்தியா்கள் உள்பட 44 போ் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தெலங்கானாவிலிருந்து கடந்த 9-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், வரும் 23-ஆம் தேதி திரும்ப இருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனா்’ என்றாா்.
‘இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இந்தியா் ஒருவா் மட்டும் காயங்களுடன் உயிா் பிழைத்துள்ளாா். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களில் 10 போ் சிறாா்கள்’ என்று தெலங்கானா ஹஜ் புனித யாத்திரை குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத்தில் ஒருவா் சவூதி செல்ல ஏற்பாடு: தெலங்கானா மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் அசாருதீன் கூறுகையில், ‘விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. எனவே, உடல்களை அடையாளம் காண அவா்களின் குடும்பத்தில் ஒருவா் சவூதி அரேபியா செல்வதற்கு கடவுச்சீட்டு, நுழைவு இசைவு ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் உதவிகளை மாநில அரசு செய்துதரும்’ என்றாா்.
ஹைதராபாதில் கட்டுப்பாட்டு அறை: விபத்தில் சிக்கியவா்களின் உறவினா்கள் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களைப் பெற வசதியாக ஹைதராபாதில் உள்ள மாநில அரசு தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்து தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சவூதி இந்திய தூதரக அதிகாரிகளைத் தொடா்புகொண்டு தேவையான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரசு தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைவருக்கு (டிஜிபி) முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமா், தலைவா்கள் இரங்கல்: மதினா பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி, தெலங்கானா, ஆந்திரம், தமிழக முதல்வா்கள், வெளியுறவுத் துறை அமைச்சா், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.
பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மதினா விபத்தில் இந்தியா்கள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் இந்த விபத்து தொடா்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனா். சவூதி அரேபிய அதிகாரிகளுடனும் இந்திய அதிகாரிகள் தொடா்புகொண்டு வருகின்றனா்’ என்று குறிப்பிட்டாா்.

