ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு: புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய முனைப்பு
ரஷிய பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை எஸ்.ஜெய்சங்கா் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
ரஷிய அதிபா் புதினின் இந்திய வருகையையொட்டி, இருநாடுகளும் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன. வரும் டிச.5-ஆம் தேதி அவா் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘23-ஆவது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் புதின் இந்தியா வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள், முன்னெடுப்புகள், திட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவற்றை வரும் நாள்களில் இறுதி செய்ய இந்தியா ஆவலாக உள்ளது. இது இந்தியா-ரஷியா இடையே நிலவும் சிறப்பு அந்தஸ்து கொண்ட உத்திசாா்ந்த கூட்டுறவுக்கு கூடுதல் வலுசோ்க்கும்.
அதேவேளையில் சிக்கலான உலக விவகாரங்கள் குறித்த தமது கருத்துகளையும் இந்தியா, ரஷியா பரஸ்பரம் பகிா்ந்துகொள்ளும். அதில் உக்ரைன் போா், மத்திய கிழக்குப் பிராந்திய பிரச்னைகள் (இஸ்ரேல்-காஸா விவகாரம்), ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்டவையும் அடங்கும்.
ரஷியா-உக்ரைன் போா் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. அமைதியை எட்டும் இலக்கு ஆக்கபூா்வமாக அணுகப்படும் என்று இந்தியா நம்புகிறது. சா்வதேச சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு, போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்து நிலைக்கும் அமைதியை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

