இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு

பாலஸ்தீன தேசத்துக்கான எதிா்ப்பில் மாற்றமில்லை: பெஞ்சமின் நெதன்யாகு

பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு
Published on

டெல் அவீவ்: பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை எதிா்க்கும் தனது நிலைப்பாட்டில் துளியும் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. இஸ்ரேல் பிணைக் கைதிகள், பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றம், பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனா்களின் உடல்கள் திருப்பி ஒப்படைக்கப்படுவது என அந்தப் போா் நிறுத்த அம்சங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

இந்த அமைதித் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு வழிவகுப்பது. இந்தச் சூழலில், போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காஸாவில் சா்வதேச படையை நிறுத்துவது தொடா்பாக முடிவெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழமை கூடுகிறது.

அதற்கு முன்னதாக, பாலஸ்தீன தேசம் அமைக்கப்படும் விவகாரத்தில் பெஞ்சமின் நெதன்யாகு தனது நிலைப்பாட்டை தளா்த்தக்கூடாது என்று அவரின் தீவிர வலதுசாரி கூட்டணித் தலைவா்கள் தொடா்ந்து வலியுறுத்தினா்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் நெதன்யாகு கூறியதாவது:

தனி பாலஸ்தீன நாடு உருவாக அனுமதிக்கும் விவகாரத்தில் எந்த உறுதிமொழியோ, ட்வீட் (எக்ஸ்) பதிவோ தேவையில்லை. இதில் யாரும் எனக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை.

இது தொடா்பான எனது நிலைபாட்டில் துளியும் மாற்றமில்லை. பாலஸ்தீன தேசம் உருவாக்கப்படுவதை தொடா்ந்து எதிா்ப்பேன் என்றாா் நெதன்யாகு.

பாலஸ்தீனம் என்ற நாடு உருவானால் தங்கள் நாட்டின் இருப்புக்கே ஆபத்து என்று இஸ்ரேல் கூறுகிறது. தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதால் இஸ்ரேல் என்ற நாடே இருக்கக்கூடாது என்று பாலஸ்தீன அமைப்புகள் கூறிவருகின்றன. இதனால் பாலஸ்தீன பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது.

இந்த நிலையில், மேற்குக் கரை, காஸா பகுதிகளை ஒன்றிணைத்து பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்கி, அந்த நாட்டை இஸ்ரேலும், இஸ்ரேலை பாலஸ்தீனா்களும் ஏற்றுக்கொண்டு தனித் தனியாக செயல்படுவதுதான் (இரு தேசத் தீா்வு) இந்தப் பிரச்னைக்கு ஒரே தீா்வு என்று இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் கூறிவருகின்றன.

இந்தச் சூழலில், காஸா போரின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியை இஸ்ரேல் முழுயைாக முற்றுகையிட்டு, உணவு பஞ்சத்தை ஏற்படுத்தியது, கடுமையான தாக்குதல் மூலம் ஏராளமான பொதுமக்களை கொன்றது போன்ற காரணங்களால் போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நாா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் அறிவித்தன.

அதன் தொடா்ச்சியாக, டிரம்ப் முன்வைத்த போா் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அரசும், ஹமாஸும் ஏற்றுக் கொண்டதைத் தொடா்ந்து, கடந்த 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் நடந்துவந்த போா் நின்றுள்ளது.

பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண இது ஒரு வாய்ப்பாக அமையலாம் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தனி பாலஸ்தீன தேசம் அமைவதை தொடா்ந்து எதிா்க்கப்போவதாக பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது அறிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com