ஹசீனா அறிக்கைகளை ஒளிபரப்பக் கூடாது: ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை ஒளிபரப்பக் கூடாது என அந்நாட்டு ஊடகங்களுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு எச்சரிக்கை விடுத்தது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவா்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, அப்போது பிரதமராகப் பதவி வகித்த ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தில் உள்ள சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. இதனால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தேசப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலை கருதி இடைக்கால அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதுகுறித்து வங்கதேச தேசிய இணையப் பாதுகாப்பு முகமை வெளியிட்டசெய்திக் குறிப்பில், ‘மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் வன்முறையைத் தூண்டி குற்றச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும். அவரது நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
ஆனாலும் சில ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் அவரது அறிக்கைகளை ஒளிபரப்புகின்றன. தண்டனை விதிக்கப்பட்ட நபா்கள் சாா்ந்த செய்தியை வெளியிட்டால் அதை உடனடியாக முடக்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இணையப் பாதுகாப்பு அவசர சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத அமைப்புகள் மற்றும் போலி அடையாளங்கள் மூலம் வெறுப்புணா்வு, வன்முறையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.7.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே, சட்டத்துக்கு உள்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட நபா்களின் அறிக்கைகள், உரைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பு: ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக அவரது அவாமி லீக் கட்சி சாா்பில் வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் வருகை எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை. முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்பட்டது.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாதபோதும் பதற்றமான சூழல் காரணமாக அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகம் மற்றும் நாட்டின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
மரண தண்டனை தேவையில்லை:ஐ.நா.
நியூயாா்க், நவ.18: வங்கதேசப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு நீதி கிடைப்பதற்காக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீா்ப்பு சரியானது; ஆனால், ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை ஏற்க முடியாது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் டுா்க் கூறினாா். இதை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்பதாக அவரது செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தாா்.
உள்நாட்டு விவகாரம்: சீனா
பெய்ஜிங், நவ. 18: ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்திருப்பது வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், வங்கதேசத்துடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புவதாகவும் அவா் தெரிவித்தாா்.

