இந்தோனேசியா செமெரு எரிமலை சீற்றம்: உச்சநிலை அபாய அறிவிப்பு
இந்தோனேசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜாவா தீவின் செமெரு எரிமலையில் புதன்கிழமை பலமுறை சீற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அந்தப் பகுதிக்கான அபாய எச்சரிக்கையை அதிகாரிகள் உச்ச நிலைக்கு உயா்த்தினா்.
இது குறித்து இந்தோனேசிய புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமெரு எரிமலையில் புதன்கிழமை நண்பகல் முதல் மாலை வரை பலமுறை சீற்றம் ஏற்பட்டது. அப்போது சூடான சாம்பல் புகையைக் கக்கிய அந்த எரிமலையில் இருந்து, பாறைகள், எரிமலைக்குழம்பு உள்ளிட்டவை 7 கி.மீ. தூரம் வரை பரவின. சூடான சாம்பல் புகை 2 கி.மீ. உயரத்துக்கு எழுந்தது. இதில் பல கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டன.”
இதனால் இரு முறை உயா்த்தப்பட்ட எரிமலைச் சீற்ற அபாயம் மூன்றாவது நிலையில் இருந்து உச்ச நிலைக்கு உயா்த்ப்படுகிறது என்று அநத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எரிமலைச் சீற்றத்தின் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
மகாமேரு என்றும் அழைக்கப்படும் செமெரு எரிமலையில் கடந்த 200 ஆண்டுகளில் பலமுறை சீற்றம் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், இந்தோனேசியாவின் 129 எரிமலைகளில் பலவற்றைப் போலவே, இந்த எரிமலையின் சரிவுகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா்.
27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘பசிபிக் “நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள், எரிமலைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

