

அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகருக்கு சூரியன் பிரியாவிடை கொடுத்துவிட்டது. இனி 65 நாள்கள் முழுவதும் இருள்தான், ஜன.23ஆம் தேதிதான் சூரிய உதயத்தைக் காண முடியுமாம்.
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகரம் தன்னுடைய துருவ இரவு காலத்துக்குள் நுழைந்திருக்கிறது. இங்கிருக்கும் மக்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை சூரிய உதயத்தைக் காண முடியாது. பகல் நேரத்திலும் கடுமையான இருள் சூழ்ந்திருக்கும்.
இந்த ஆண்டில், உத்கியாத்கிக் நகரின் கடைசி சூரிய அஸ்தமனம் நவ. 18ஆம் தேதி செவ்வாயன்று மாலை நிகழ்ந்துள்ளது. இனி 65 நாள்களுக்கு துருவ இரவு காலம்.
இந்த மிகச் சிறிய நகரம், ஆர்க்டிக் பெருங்கடலின் கரையில் 300 மைல்கள் தொலைவில் உள்ளது. பூமியின் 71.17 டிகிரி வட் அட்சரேகையில் அமைந்துள்ளதால் இந்த நகரின் அடிவானத்துக்குக் கீழே சூரியன் வரும். இதுவே துருவ இரவு நேரிடக் காரணம். சில வேளைகளில் மட்டும், அடிவானத்தின் கீழ் இருந்து இந்நருக்கு சற்று வெளிச்சம் கிட்டுமாம்.
இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழே இறங்கும். இங்கு வாழும் 5000 மக்களின் இயல்பு வாழ்க்கை நிச்சயம் பாதிக்கப்படும்.
இந்த இருள் நிரந்தரம் இல்லாவிட்டாலும், சூரியனைக் காண முடியாமல், பகல் வேளையிலும் இருள் சூழ்ந்திருக்கும் என்பதால் மக்கள் இதனைப் பழகிக் கொள்ள சில நாள்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இந்த இயற்கைக்கு அவர்கள் பல ஆண்டுகளாக தயாராகவே உள்ளனர். மின் விளக்கு வெளிச்சத்தால், அந்த நகரம் 24 மணி நேரமும் வழக்கம் போல இயங்குவதற்கு தடையேதும் இல்லை.
ஆனால், இதிலும் ஒரு ஆச்சரியம் உள்ளது. இங்கு மே மாத மத்தியில் நிலைமை தலைகீழாகிவிடும். காரணம், சூரியன் மறையவே மறையாது. ஆகஸ்ட் வரை இப்படித்தான். இதன் பெயர் நள்ளிரவு சூரியன். முழு நாள்களும் பகலாகவே இருக்கும்.
இதற்கு முக்கிய காரணம், பூமி 23.5 டிகிரி சாய்ந்த கோணத்தில் சுழல்வதே. சூரியனின் சுழற்சின்போது, ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் பூமியின் வடதிசை பகுதிகளில் சூரியன் முழுவதுமாக அடிவானத்துக்குக் கீழ் சென்றுவிடுவதும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் பூமியின் மேல் பகுதியில் காணப்படுவதும் இயற்கையாக நிகழும் நிகழ்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.