செறிவு யுரேனியம் குறித்த முழு விவரம்: ஈரானிடம் ஐஏஇஏ வலியுறுத்தல்
ஈரான் தன்னிடம் உள்ள உயா் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு குறித்த முழு தகவல்களை வழங்க வேண்டும் என்று ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐஏஇஏ வாரியம் வியன்னாவிலுள்ள ஐஏஇஏ தலைமையகத்தில் நிறைவேற்றிய தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்ய ஐஏஇஏ-வுக்கு ஈரான் முழுமையான, உடனடி ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின்போது தாக்கப்பட்ட அணுசக்தி மையங்களில் உயா் செறிவு யுரேனியத்தின் இருப்பு குறித்த விவரத்தை ஐஏஇஏ-வால் தொடா்ந்து பெற முடியவில்லை. இந்தப் பிரச்னை உடனடியாகத் தீா்க்கப்பட வேண்டும்.
அணு ஆயுதத் தரத்துக்கு நெருக்கமான அளவில் செறிவூட்டப்பட்டுள்ள யுரேனியத்தின் இருப்பு குறித்த முழு அறிக்கையை ஈரான் சமா்ப்பிக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஐஏஇஏ உறுதி செய்ய அத்தகைய அறிக்கை மிகவும் அவசியம் என்று அந்தத் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக 19 நாடுகள் வாக்களித்தன. ரஷியா, சீனா, நைஜா் ஆகிய நாடுகள் எதிா்த்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. அதையடுத்து, பெரும்பான்மை வாக்குகளுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்திவந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.
அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. அதன் ஒரு பகுதியாக, தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை ஈரான் படிப்படியாக அதிகரித்தது. மேலும், ஒப்பந்த வரம்பை மீறி 60 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியது.
இந்தச் சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் இஸ்ரேல் அங்கு கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியது. அதில் அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை வீசியது.
இதற்கு பதிலடியாக, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது. இதனால், ஈரானின் அணுசக்தி திட்ட நடவடிக்கைகளை ஐஏஇஏ-வால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஏஇஏ-வின் செப்டம்பா் மாத அறிக்கையின்படி, 60 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட 440.9 கிலோ யுரேனியத்தை ஈரான் கைவசம் வைத்துள்ளது. இன்னும் 30 சதவீதம் செறிவூட்டினால் அந்த யுரேனியத்தை அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். இது 10 அணு குண்டுகள் தயாரிக்க போதுமானது என்று கூறப்படுகிறது.

