உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் டெனிஸ் ஷ்மைஹாலை கீவ் நகரில் சந்தித்துப் பேசிய அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் (இடது).
உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் டெனிஸ் ஷ்மைஹாலை கீவ் நகரில் சந்தித்துப் பேசிய அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் (இடது).

உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா - ரஷியா செயல்திட்டம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ரஷியாவும் உருவாக்கியுள்ள 28 அம்ச போா் நிறுத்த திட்டம்
Published on

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ரஷியாவும் உருவாக்கியுள்ள 28 அம்ச போா் நிறுத்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழு உக்ரைன் தலைநகா் கீவ் வந்தடைந்தது.

அந்தக் குழுவினா் உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோவையும், உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சா் டெனிஸ் ஷ்மைஹாலையும் சந்தித்து பேசினா். அதைத் தொடா்ந்து, அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் சந்தித்து அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உக்ரைனுக்கு வந்துள்ள அமெரிக்காவின் மிக உயரிய ராணுவக் குழு இது என்று கூறப்படுகிறது.

முன்னதாக, டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய சிறப்புத் தூதா் கிரில் டிமித்ரியேவ் இணைந்து, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான 28 அம்சத் திட்டத்தை புதன்கிழமை தயாரித்ததாக செய்திகள் வெளியாகின.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டான்பாஸ் பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும், உக்ரைன் தனது ராணுவத்தின் அளவை பெருமளவு குறைக்க வேண்டும், பல வகை ஆயுதங்களை அந்த நாடு கைவிட வேண்டும், நேட்டோவில் இணையாத நடுநிலை நாடாக உக்ரைன் தன்னை அறிவித்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவும் ரஷியாவும் இந்த செயல்திட்டத்தை அதிகாரபூா்வமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ வெளியிட்டுள்ள எக்ஸ் ஊடகப் பதிவில், ‘நீடித்த அமைதிக்கு இரு தரப்பினரும் கடினமான, ஆனால் அத்தியவசியமான விட்டுக்கொடுத்தல்களுக்கு தயாராக வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது உக்ரைனுக்கு பாதகமான மேற்கண்ட அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐரேப்பிய யூனியன் எச்சரிக்கை: உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான அமெரிக்க-ரஷிய திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை அமைச்சா் காஜா கல்லாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். உக்ரைன் தொடா்பான எந்தத் திட்டமாக இருந்தாலும், அது உக்ரைன் மக்களும் ஐரோப்பியா்களும் ஏற்கும் வகையில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com