

தெற்கு காஸாவில் ஹமாஸ் படையினரால் உருவாக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுரங்க வாழ்விடப் பகுதியைக் கண்டுபிடித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அதன் விடியோவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் வைக்கப்பட்டிருந்து, கடந்த வாரம் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட வீரர் ஹர்தர் கோல்டின் உடல் இந்தச் சுரங்கத்தில்தான் வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை கண்டறிந்த சுரங்க வாழ்விடங்களிலேயே, இதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, சிக்கலான சுரங்க வாழ்விடமாக இருந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கம், தரைப்பகுதியிலிருந்து 7 கி.மீ. தொலைவும், 25 மீட்டர் ஆழத்திலும் தோண்டப்பட்டுள்ளதும், இதில் தனித்தனியாக 80 அறைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப் பாதையானது, பிலடெல்பி வளாகம் வழியாக அடிப்பகுதியில் தோண்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்துக்கு மேலே மசூதி, மருத்துவமனைகள், மழலையர் பள்ளிகள், பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்திருக்கிறது.
பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தேடுதல் வேட்டையின்போது இந்த சுரங்க வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்குள்ள அறைகளில் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த சுரங்கத்தைப் பார்க்கும்போது பல ஆண்டு காலமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
சில அறைகள், மூத்த ஹமாஸ் தளபதிகள் அமர்ந்து ஆணைகள் பிறப்பிக்கும் இடங்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க இடம் தற்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதலே, இப்பகுதிகளில் இஸ்ரேல் வீரர்களின் உடல்களை அப்படை தேடி வந்த போதும் கூட, இந்த சுரங்க வாழ்விடத்தைக் கண்டறிய முடியாமல் இருந்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014ஆம் ஆண்டு காஸா போரின் போது கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர் கோல்டின் உடலை, ஹமாஸ் கடந்த வாரம் ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. வரலாறு காணாத மோசமான நவம்பர் மாதம்! சந்தேகமேயில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.