

2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் வென்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளிலிருந்து அழகி பட்டம் வென்றவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் இன்று (நவ. 21) 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2 ஆவது இடத்தை தாய்லாந்தின் பிரவீனார் சிங் என்பவரும், 3 ஆவது இடத்தை வெனிசுலாவின் ஸ்டெஃபானி அப்சாலி என்பவரும், 4 ஆவது இடத்தை பிலிப்பின்ஸின் மா அஹ்திசா மனாலோ என்பவரும் பிடித்துள்ளனர்.
கடந்த சில வாரங்கள் முன்பு, அழகி போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் அரங்கில் பலர் முன்னிலையில் அவமதித்து பேசியதால், ஃபாத்திமா போஷ் அங்கிருந்து வெளியேறினார். மேலும், அவருக்கு ஆதரவாகப் போட்டியாளர்கள் சிலரும் அந்த அரங்கில் இருந்து வெளியேறினர்.
இதையடுத்து, ஃபாத்திமாவுக்கு ஆதரவாகப் பேசிய பிற போட்டியாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அந்த அதிகாரி மிரட்டியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இத்துடன், சில நாள்களுக்கு முன்பு அழகிப் போட்டியின் நடுவர்களில் இருவர் ஒருங்கிணைப்பாளர்கள் மோசடி செய்வதாகக் குற்றம்சாட்டி ராஜிநாமா செய்து விலகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கதேசத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி! அதிர்வுகளில் சிக்கிய இந்திய மாநிலங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.