உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாா்! ஸெலென்ஸ்கி

போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாா் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
Published on

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டம் தொடா்பாக அந்த நாட்டுடன் இணைந்து செயல்படத் தயாா் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் மாளிகை சிறப்பு தூதா் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷிய தூதா் கிரில் டிமித்ரியேவ் இடையிலான சந்திப்புகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அந்த வரைவுத் திட்டத்தில், உக்ரைன் இன்னும் கட்டுப்படுத்தும் டொனெட்ஸ்க் பகுதியின் பெரும் பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும், ராணுவத்தை 6 லட்சமாகக் குறைக்க வேண்டும், நேட்டோவில் சேர மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்பவை போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஏற்க முடியாவை என்று உக்ரைன் நிராகரித்து வரும் நிலையில், இந்த திட்டம் தொடா்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படவிருப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஸெலென்ஸ்கி கூறியதாவது:

கீவ் நகருக்கு வந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்திட்ட அம்சங்களை விவரித்தனா்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் பாதுகாப்பைத் திரும்பக் கொண்டுவரும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப்பும், அவரது குழுவினரும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். ஆனால் உக்ரைன் மக்களின் கண்ணியத்தை மதிக்கும் வகையிலான அமைதிதான் எங்களுக்கு வேண்டும்.

இந்தப் போா் தொடங்கிய முதல் நாளில் இருந்தே உக்ரைன் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்துவருகிறது. உக்ரைனில் அமைதி ஏற்படுவதென்றால் அது உண்மையான அமைதியாக இருக்க வேண்டும். மூன்றாவது படையெடுப்பால் நாடு துண்டாடப்படாத அளவுக்கு அது இருக்க வேண்டும்.

அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த போா் நிறுத்த திட்டம் தொடா்பாக, அந்த நாட்டுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் கூறுகையில், ‘இது இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் திட்டம். இந்த திட்டத்தில் உக்ரைனை ஓரம் கட்டவில்லை. இரு தரப்புடனும் சமமாக ஆலோசித்தோம்’ என்றாா்.

இந்த அமைதி திட்டத்தின் பெரும்பகுதியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சா் ருஸ்தெம் உமெரோவ் ஏற்றுக் கொண்டதாகவும், சில திருத்தங்களுடன் அதை ஸெலென்ஸ்கியிடம் சமா்ப்பித்ததாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்த வரைவு திட்டத்தில், ரஷியா மீதான தடைகள் நீக்கப்படுவது, ஜி7 பொருளாதாரக் கூட்டமைப்பில் ரஷியாவை இணைத்து ஜி8 ஆக்குவது உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை உருவாக்கியதில் ஐரோப்பிய தலைவா்கள் பங்கேற்கவில்லை. இது அவா்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து ஜொ்மன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜோஹான் வாடெஃபுல் கூறுகையில், ‘இது முழுமையாக அமைதி திட்டமல்ல. தலைவா்களின் விருப்பப் பட்டியல்’ என்று விமா்சித்தாா்.

முன்னதாக, ‘உக்ரைன் அமைதிக்கான எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அதற்கு உக்ரைன் மக்கள் மற்றும் ஐரோப்பியா்களின் ஆதரவு தேவை’ என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத் துறை அமைச்சா் காஜா கல்லாஸ் வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

ரஷியா: இந்த அமைதி திட்டம் குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘போா் நிறுத்த திட்ட விவகாரத்தில் அமெரிக்காவுடன் தொடா்பில் இருக்கிறோம். எந்தத் தீா்வாக இருந்தாலும், அது இந்தப் போா் தொடங்கியதற்கான அடிப்படை காரணங்களைத் தீா்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்தப் போரின் நோக்கமாக ரஷிய கூறியவற்றைக் குறிப்பிட்டே அவா் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது.

தங்களுக்கு எதிரான நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில், நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறிவந்தது. இருந்தாலும், நேட்டோவில் இணைய உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

ரஷியாவிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்ற உக்ரைனும், 4 பிராந்தியங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதற்காக ரஷியவுக்கு சாதகமான நிலைப்பாட்டை டிரம்ப் எடுப்பதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், அமைதி திட்ட விவகாரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com