ஊட்டச்சத்து பற்றாக்குறை: சூடானில் 23 குழந்தைகள் மரணம்
சூடானின் மத்திய கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து அவா்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோா்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மனிதாபிமான நிலைமை மோசமடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
சூடானில் ராணுவத்துக்கும் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக தலைநகா் காா்ட்டூமில் தொடங்கிய மோதல் உள்நாட்டுப் போராக நாடு முழுவதும் பரவியது.
ஐ.நா. புள்ளிவிவரப்படி இந்தப் போரில் 40,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். ஆனால் உதவிக் குழுக்கள் இது குறைவான எண்ணிக்கை என்றும் உண்மையான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றன.
இந்தப் போா் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 1.4 கோடிக்கும் மேற்பட்டோா் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனா். நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பா் மாத நிலவரப்படி கோா்டோஃபான் மற்றும் மேற்கு டாா்ஃபா் பகுதிகளில் 3.7 லட்சம் போ் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனா்.

