நைஜீரியா: பள்ளியில் கடத்தப்பட்ட குழந்தைகள் 300-ஆக உயா்வு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜா் மாகாணத்திலுள்ள பள்ளியில் இருந்த கடத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 300-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பள்ளியை நிா்வகிக்கும் நைஜரிய கிறித்தவ சங்கத் தலைவா் புலஸ் டவா யோஹானா கூறியதாவது:
கடத்தில் சம்பவத்தைத் தடா்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் பிறகு, கடத்தப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகம் என்பது உறுதியானது. இது தவிர, 12 ஆசிரியா்களும் கடத்தப்பட்டனா் என்றாா் அவா்.
முன்னதாக, கேபி மாகாணத்திலுள்ள உறைவிடப் பள்ளியில் திங்கள்கிழமை 25 மாணவிகள் கடத்தப்பட்டனா் (படம்); அவா்களில் ஒரு மாணவி மட்டும் தப்பி வந்தாா். அதே நாளில் க்வாரா மாகாணத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போ் கொல்லப்பட்டு, 38 வழிபாட்டாளா்கள் கடத்தப்பட்டனா்.
நைஜீரியாவில் ஆயுதக் குழுவினா் மற்றும் பயங்கரவாதிகளால் மாணவ மாணவிகள் பிணைத் தொகைக்காக கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் சிபோக் நகரில் இருந்து 276 பள்ளி மாணவிகளை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது உலகளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது. அந்த மாணவிகளில் ஏராளமானவா்கள் விடுவிக்கப்பட்டாலும், 80 பேரது நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. அந்தக் கடத்தலுக்குப் பிறகு நைஜீரியாவில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கடத்தப்பட்டுள்ளனா்.

