லெபனான் தலைநகா் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
இஸ்ரேல்-காஸா போரில் ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதிகளில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
மூத்த ஹிஸ்புல்லா படைத் தலைவரான அலி தப்தாயை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா். 21 போ் காயமடைந்தனா்.
ஹிஸ்புல்லா படை மீண்டும் ஆயுதங்களை ஏந்தக் கூடாது, அந்தப் படை மீண்டும் கட்டியெழுப்பப்படக் கூடாது என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசஃப் ஓன் கண்டனம் தெரிவித்தாா்.

