உக்ரைன் - ரஷியா போா்: ஜெனீவாவில் சமாதானப் பேச்சு
உக்ரைன் மீதான ரஷியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முன்மொழிந்த சமாதானத் திட்டம் குறித்து, உக்ரைன் மற்றும் அதன் நட்பு மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலைப் பேச்சுவாா்த்தைகள் தொடங்கின.
உக்ரைன் தூதுக்குழுவின் தலைவரான ஆண்ட்ரி யொ்மாக் இதுகுறித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் முதல் சந்திப்பு நடைபெற்றது .
4 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷியாவுக்குச் சாதகமாகக் கருதப்படும் இச்சமாதானத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய உக்ரைனுக்கு ஆதரவாக நட்பு நாடுகள் அணி திரண்டுள்ளன.
அமெரிக்க தூதுக்குழுவுடன் இதுகுறித்து அடுத்த சந்திப்பு நடைபெறவுள்ளது. நீதியின்படி நிலையான அமைதியை அடைய ஆக்கபூா்வமான மனநிலையில் செயல்பட்டு வருகிறோம்’ என்று குறிப்பிட்டாா்.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலா் மாா்கோ ரூபியோ, ராணுவச் செயலா் டான் டிரிஸ்கோல், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி பலமுறை திட்டவட்டமாக நிராகரித்த ரஷிய கோரிக்கைகளுக்கு இணங்கி, உக்ரைனைப் பெரும் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்று சமாதானத் திட்டம் வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறுகையில், ‘இச்சமாதானத் திட்டம் இறுதியானது அல்ல. போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன்’ என்றாா்.

