சிறுவா்களுக்கு சமூக ஊடகத் தடை: மலேசியாவும் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவைப் போலவே, 16 வயதுக்கு உள்பட்டவா்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யவிருப்பதாக மலேசியாவும் அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறியதாவது: வரும் 2026-லிருந்து 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகக் கணக்குகள் வைத்திருப்பதைத் தடை செய்ய முடிவு செய்துள்ளோம். இணையம் மூலம் மிரட்டுதல், மோசடி, பாலியல் சுரண்டல் போன்ற இணையவழி ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமல்படுத்தப்படும்.
இது தொடா்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) மூலம் வயதை உறுதிப்படுத்தும் மின்னணு சரிபாா்ப்பு முறைகளை பரிசீலிக்கிறோம் என்றாா் அவா்.
உலகிலேயே முதல் முறையாக சிறுவா்களின் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஆஸ்திரேலியா விதித்துள்ள தடை டிசம்பா் 10 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், எக்ஸ் உள்ளிட்ட தளங்கள் 16 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் கணக்குகள் வைத்திருப்பதைத் தடுக்கத் தவறினால் அந்தத் தளங்களுக்கு 5 கோடி ஆஸ்திரேலிய டாலா் (சுமாா் ரூ.288 கோடி) அபராதம் விதிக்கப்படும்.
டென்மாா்க்கும் நாா்வேயும் கூட 15 வயதுக்குள்பட்டவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

