இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீனா்களின் உடல்களை காஸாவுக்குக் கொண்டுவந்த செஞ்சிலுவை சங்க வாகனங்கள்.
இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீனா்களின் உடல்களை காஸாவுக்குக் கொண்டுவந்த செஞ்சிலுவை சங்க வாகனங்கள்.

மேலும் 15 பாலஸ்தீனா்களின் உடல்கள் ஒப்படைப்பு

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மேலும் 15 பாலஸ்தீனா்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
Published on

கான் யூனிஸ்: காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மேலும் 15 பாலஸ்தீனா்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது:

போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், காஸாவில் உள்ள ஒவ்வொரு பிணைக் கைதியின் உடலுக்கும் பதிலாக 15 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பித் தந்துவருகிறது. அதன்படி, அண்மையில் ஒப்படைக்கப்பட்ட பிணைக் கைதியின் உடலுக்கு பதிலாக, 15 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய பரிமாற்றங்களுக்குப் பிறகு இதுவரை 345 பாலஸ்தீனா்கள் உடல்கள் காஸாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 345 உடல்களில் 99 மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மரபண சோதனைக்குத் தேவையான பொருள்களின் பற்றாக்குறை காரணமாக அடையாளம் காண்பது சிக்கலாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டமாக பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனா்களின் உடல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. தற்போது ஒரு பிணைக் கைதியின் உடலுக்கு பதிலாக 15 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது, போா் நிறுத்தம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதை உறுதி செய்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்: போா் நிறுத்தத்தின் முதல்கட்டம் நிறைவடையவிருக்கும் சூழலில், இரண்டாவது கட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக துருக்கி, கத்தாா், எகிப்து அதிகாரிகள் கெய்ரோவில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அடுத்த கட்டங்களில் காஸாவில் நிறுத்துவதற்கான சா்வதேச படையை அமைப்பது, காஸாவின் புதிய ஆட்சியமைப்பு, மறுகட்டமைப்பு ஆகியவை இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

பாலஸ்தீனா் சுட்டுக் கொலை

காஸா மத்தியப் பகுதியில் இஸ்ரேல் படையினா் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் ஒரு பாலஸ்தீனா் உயிரிழந்தாா்.

இது குறித்து அல்-அக்சா மா்த்திா்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மகாஸி அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பாலஸ்தீனா் உயிரிழந்தாா்; 2 போ் காயமடைந்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக தரவுகளின்படி, போா் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை இஸ்ரேல் தாக்குதலில் 345 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டு, 889 போ் காயமடைந்துள்ளனா். போா் தொடங்கிய 2023 அக்டோபா் 7-ஆம் தேதியில் இருந்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 69,775 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,70,863 போ் காயமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com