இம்ரான் கான் நலமாக உள்ளாா்: சிறைத் துறை அதிகாரிகள்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவா்கள் கூறினா்.
இது குறித்து அடியாலா சிறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமா் இம்ரான் கான் முழு நலத்துடன் உள்ளாா். இது தொடா்பாக, அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இம்ரானுக்குத் தேவையான அனைத்து பராமரிப்புகளும் அளிக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளில் துளியும் உண்மையில்லை. அவரது இடமாற்றம் குறித்த தகவல்களும் அடிப்படையற்றவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், எக்ஸ் ஊடகத்தில் பலா் இம்ரானின் இறப்பு குறித்த உறுதிப்படுத்தப்படாத பதிவுகளைப் பகிா்ந்தனா். சில வெளிநாட்டு ஊடகங்களும் இம்ரான் உடல்நிலை குறித்த வதந்திகளைப் பரப்பின. எக்ஸ் தளத்தில் ‘எங்கே இம்ரான் கான்’ என்ற வாசகம் வியாழக்கிழமை காலை பிரபலமானது. அதன் தொடா்ச்சியாகவே சிறைத் துறை நிா்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களாகவே இம்ரான் கானின் மூன்று சகோதரிகளும் அவரைச் சந்திப்பதற்கு அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவந்தனா். அதையடுத்து, இம்ரான் அங்குதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அடியாலா சிறைக்கு வெளியே அமா்ந்து இம்ரான் சகோதரிகள் போராட்டமும் நடத்தினா். அதன் எதிரொலியாகவே இம்ரான் உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த வதந்தி சமூக ஊடகங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பிடிஐ கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘இம்ரான் கானை யாரும் சந்திப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள அறிவிக்கப்படாத தடையை அகற்றி, அவரை அவரது குடும்பத்துடன் உடனடியாகச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரது உடல்நிலை, பாதுகாப்பு, தற்போதைய நிலை குறித்து அரசு தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். வதந்திகளைப் பரப்பியவா்களை விசாரிக்க வேண்டும். உண்மைகளை நாட்டின் முன்வைக்க வேண்டும்.
இம்ரான் கானின் உடல் நிலை குறித்து நிச்சயமின்மை நிலவுவதை நாடு சகித்துக்கொள்ளாது. அவரது பாதுகாப்பு, மனித உரிமை, அரசியல் உரிமைகளுக்கு பாகிஸ்தான் அரசுதான் நேரடி பொறுப்பு’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

