

இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவது, சந்தை அணுகல், தரவுப் பரிமாற்றம், தங்கம் இறக்குமதி ஒதுக்கீடு, பொருள் குவிப்புக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தில்லியில் நடைபெற்ற இந்த இருதரப்பு ஆலோசனை குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா- யுஏஇ இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (சிஇபிஏ) கீழ் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இதுவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) போன்ற இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமாகும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இருதரப்பு சந்தை அணுகலில் உள்ள சிக்கல்கள், தரவுப் பரிமாற்றம், இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கான வரி விகித ஒதுக்கீடு விவகாரம், பொருள் குவிப்புக்கு எதிரான நடவடிக்கை, இந்திய தரச் சான்று (பிஐஎஸ்) உரிமம் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மருந்து துறைகளில் ஒழுங்குமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் யுஏஇ- யின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இடையேயான உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அனுமதிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைந்து மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளிடையேயான இருதரப்பு வர்த்தகம் 2024- 2025- ஆம் ஆண்டில் ரூ. 8,93,635 கோடியை (100 பில்லியன் டாலர்) கடந்தது. இது 2023- 24- ஆம் ஆண்டைக் காட்டிலும் 19.6 சதவீதம் அதிகமாகும்.
எண்ணெய் அல்லாத மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் வர்த்தகத்தை வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தவும் இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.