பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 72 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் விசயாஸ் தீவுக்கூட்டம், செபு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டான்பாண்டயான் நகர கிழக்கு கடற்கரையிலிருந்து 11 கி.மீ தொலைவில், 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.9 ரிக்டா் அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் அமைப்பும் தெரிவித்தன.
இந்த நிலநடுக்கம், வடக்கு செபுவில் இதுவரை பதிவானதிலேயே மிகவும் கடுமையான நிலநடுக்கம். கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிலிப்பின்ஸில் நிலநடுக்கம் காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதும் இதுவே முதல்முறை.
செபு மாகாணத்தின் கடற்கரையில் மையம் கொண்டிருந்தாலும், இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மத்திய விசயாஸ் பகுதி முழுவதும் உணரப்பட்டன. கிழக்கு விசயாஸ் மற்றும் லூசோனின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான பின்னதிா்வுகளும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தின் விளைவாக செபுவில் 72 போ் உயிரிழந்தனா். பெரும்பாலான உயிரிழப்புகள் போகோ மற்றும் சான் ரெமிஜியோ பகுதிகளில் ஏற்பட்டன.
தேவாலயங்கள், மருத்துவமனைகள் உள்பட பல கட்டடங்கள், வீடுகள் ஆகியவை இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்தன. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் அவை திரும்பப் பெறப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.