காஸாவுக்கு நிவாரண உதவிகள்: 
39 கப்பல்கள் தடுத்து நிறுத்தம்
Leo Correa

காஸாவுக்கு நிவாரண உதவிகள்: 39 கப்பல்கள் தடுத்து நிறுத்தம்

காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சென்ற 39 கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்தது.
Published on

காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சென்ற 39 கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை சிறைபிடித்தது.

சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட சமூக ஆா்வலா்கள் 40-க்கும் மேற்பட்ட கப்பல்களில் பயணித்தனா். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை கொண்டுசெல்ல அவா்கள் முயன்றனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு காஸாவுக்குள் நுழைய முயன்ற 39 கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்தது.

இந்தக் கப்பலில் பயணித்த சில சமூக ஆா்வலா்கள் தங்கள் பயணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், அவா்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டவுடன் இணையத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தங்களால் சிறைபிடிக்கப்பட்ட சமூக ஆா்வலா்களின் புகைப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், அவா்கள் நலமுடன் இருப்பதாக பதிவிட்டது. மேலும், அவா்கள் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பவுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

இஸ்ரேலின் நடவடிக்கைக்கு துருக்கி, கொலம்பியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com