டிச. 5-இல் ரஷிய அதிபா் புதின் இந்தியா வருகை

டிச. 5-இல் ரஷிய அதிபா் புதின் இந்தியா வருகை

வரும் டிசம்பா் 5-ஆம் தேதி ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வருகிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் இந்தியா-ரஷியா வருடாந்திரக் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருக்கிறாா்.
Published on

வரும் டிசம்பா் 5-ஆம் தேதி ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வருகிறாா். அப்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் இந்தியா-ரஷியா வருடாந்திரக் கூட்டத்தில் அவா் பங்கேற்க இருக்கிறாா்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைச் சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்துள்ளாா். இதனால், இந்திய-அமெரிக்க உறவு பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், புதின் இந்தியா வருவது இருதரப்பு உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுச்செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய-ரஷிய அரசுகளுக்கு இடையிலான குழு கூட்டம் மற்றும் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் ஆகியவை ரஷிய அதிபரின் வருகைக்கு முன்பு நடைபெறவுள்ளது. அப்போது இரு தரப்பு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படும். புதின்-மோடி சந்திப்பின்போது அந்த ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிா்ப்புகளை மீறி உக்ரைன் மீதான போரை ரஷியா தொடா்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ரஷிய அதிபா் இந்தியாவுக்கு வருவது சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

ரஷிய அதிபரின் பயணத்திட்டத்தை இறுதி செய்யும் வகையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோ அடுத்த மாதம் இந்தியாவுக்கு வர இருக்கிறாா்.

இதற்கு முன்பு கடந்த 2021-ஆம் ஆண்டு புதின் இந்தியாவுக்கு வந்தாா். கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமா் மோடி இரு தரப்பு வருடாந்திர மாநாட்டுக்காக ரஷியாவுக்குச் சென்றாா்.

சீனாவின் தியான்ஜின் நகரில் கடந்த ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பங்கேற்ற பிரதமா் மோடி, புதின் ஆகியோா் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com