
அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாக செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.
அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் தவிர, மற்றத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் அரசு நிர்வாக செலவீனங்கள் தொடர்பான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்த மசோதா மூலமாகத்தான், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையான செனட் அமைவயில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால், இந்த முக்கிய மசோதா நிறைவேற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகள் கிடைக்க வேண்டும்.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருப்பதால், கடந்த 24 மணி நேரமாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.
இதன்படி, அமெரிக்க அஞ்சல் துறை, மருத்துவத் துறை, சமூகப் பாதுகாப்பு பண வழங்கல், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, வங்கிகள், நீதிமன்றங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, ஃபெடரல் சட்ட அமலாக்கத் துறை, ராணுவத் துறையினர் மட்டும் பணியாற்றுவார்கள்.
ஆனால், ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், விமானக் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசியப் பணியாளர்களாக கருதப்பட்டு பணியாற்றுவார்களே தவிர, செலவீன மசோதா நிறைவேறும் வரை இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று தெரிகிறது.
அதேவேளையில், தேசிய பூங்காக்கள், பார்வையாளர் மையங்கள், சுற்றுலா தொடர்பான அரசுக் கட்டங்கள், அரசு அருங்காட்சியகங்கள், அரசு நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு, அமெரிக்க அரசு முடங்கியிருப்பதால், நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் ஏற்படும் என்றும், 7,50,000 அமெரிக்க அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.