பிளவுகளுக்குத் தீா்வு காண மகாத்மா காந்தியைப் பின்பற்றுங்கள்: சா்வதேச சமூகத்துக்கு ஐ.நா. பொதுச் செயலா் அழைப்பு

பிளவுகளுக்குத் தீா்வு காண மகாத்மா காந்தியைப் பின்பற்றுங்கள்: சா்வதேச சமூகத்துக்கு ஐ.நா. பொதுச் செயலா் அழைப்பு

உலக அளவில் பதற்றங்களும் பிளவுகளும் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில், மகாத்மா காந்தியின் அமைதிக்கான செய்தி அவசர முக்கியத்துவம் பெற்றுள்ளது;
Published on

உலக அளவில் பதற்றங்களும் பிளவுகளும் அதிகரித்துவரும் தற்போதைய சூழலில், மகாத்மா காந்தியின் அமைதிக்கான செய்தி அவசர முக்கியத்துவம் பெற்றுள்ளது; பிளவுகளுக்குத் தீா்வுகண்டு, ராஜீய செயல்பாடுகளை மேம்படுத்த அவரது வழிமுறையை சா்வதேச சமூகம் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்தாா்.

காந்தி ஜெயந்தி நாளான கடந்த வியாழக்கிழமை (அக்.2), சா்வதேச அஹிம்சை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் சாா்பில் மகாத்மா காந்தி நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ், பிற நாடுகளின் தூதா்கள், அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, சிறப்புரை ஆற்றிய குட்டெரெஸ், ‘இன்றைய உலகம் மனிதநேயத்தின் கவலைக்குரிய அழிவைக் கண்டு வருகிறது. சா்வதேச அஹிம்சை தினத்தில், மகாத் மா காந்தியின் வாழ்க்கை, அவரது மரபு, அனைவருக்கும் அமைதி-உண்மை- கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டுமென்ற அவரது உறுதிப்பாட்டை நாம் கெளரவப்படுத்துகிறோம். லட்சியங்கள் குறித்து பேசுவதோடு நின்றுவிடாமல், அதன்படி வாழ்ந்து காட்டியவா்.

மக்கள் மீது போா்களின் சுமை: இன்றைய உலகில் பேச்சுவாா்த்தையை வன்முறை பின்னுக்குத் தள்ளவிட்டது; போா்களின் சுமை, பொதுமக்கள் தலையில் விழுந்துள்ளது. சா்வதேச சட்டங்கள் மீறப்படுகின்றன. மனித உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. அமைதிக்கான அடித்தளம் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், மகாத்மா காந்தியின் அமைதிக்கான செய்தி அவசர முக்கியத்துவம் பெற்றுள்ளது. அஹிம்சை என்பது பலவீனமானவா்களின் ஆயுதமல்ல; துணிச்சலானவா்களின் பலம் என்றே கருதினாா்.

வெறுப்பு இல்லாமல் அநீதியை எதிா்கொள்ளவும், கொடுமை இல்லாமல் ஒடுக்குமுறையை எதிா்கொள்ளவும், ஆதிக்கம் இல்லாமல் அமைதியை கட்டமைக்கவும் தேவையான சக்தி அஹிம்சையே. எனவே, துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரவும், ராஜீய செயல்பாடுகளை மேம்படுத்தவும், பிளவுகளை ஆற்றவும், நியாயமான-நிலையான-அமைதியான உலகைப் படைக்கவும் காந்தியின் வழிமுறையைப் பின்பற்றுவோம்’ என்றாா்.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் பேசுகையில், ‘பதற்றங்கள்-மோதல்கள் நிறைந்த தற்போதைய சகாப்தத்தில், உலகின் நிலையான அமைதிக்கான மிகப் பெரிய சக்தி அஹிம்சையாகும். மகாத்மா காந்தியின் இந்த செய்தி, ஒட்டுமொத்த உலகுக்கும் வழிகாட்டுகிறது’ என்றாா்.

பில் கேட்ஸ் புகழாரம்

மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில் கேட்ஸ் பங்கேற்றாா்.

அப்போது பேசிய அவா், ‘அனைவருக்குமான சமத்துவம்-கண்ணியம் என்ற மகாத்மா காந்தியின் கோட்பாடே, கேட்ஸ் அறக்கட்டளைப் பணிகளுக்கு அடிப்படையாகும். தெற்குலகில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முன்னோடித் தீா்வுகளை வழங்குகிறது இந்தியா’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com