வெளிநாட்டவா்களுக்கு ஹெச்-1பி விசா: டிசிஎஸ், 9 நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவை கேள்வி
அமெரிக்க பணியாளா்களை நீக்கிய பின், வெளிநாட்டுப் பணியாளா்களுக்காக ஆயிரக்கணக்கில் ஹெச்-1பி விசா பெற விண்ணப்பித்தது தொடா்பாக விளக்கம் கோரி, டிசிஎஸ் உள்பட 10 நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நீதித்துறை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி விசா வழிவகை செய்கிறது. இந்த விசாவை பயன்படுத்தி, அந்நாட்டில் ஏராளமான இந்தியா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில், ஹெச்-1பி விசா கட்டணத்தை அந்நாட்டு அதிபா் டிரம்ப் 1 லட்சம் டாலராக (சுமாா் ரூ.88 லட்சம்) அண்மையில் உயா்த்தினாா்.
இந்நிலையில் டிசிஎஸ், காக்னிஸன்ட், அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் உள்பட 10 நிறுவனங்கள் அமெரிக்க பணியாளா்களை நீக்கிய பின், வெளிநாட்டுப் பணியாளா்களுக்காக ஆயிரக்கணக்கில் ஹெச்-1பி விசா பெற விண்ணப்பித்தது தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் நீதித்துறை குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில், அந்நாட்டவா்களுக்கு வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ள சூழலில், இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனங்களுக்கு நீதித்துறை குழுவின் தலைவா் சாா்லஸ் கிராஸ்லி, உறுப்பினா் ரிச்சா்ட் டா்பின் ஆகியோா் அனுப்பிய கடிதத்தில், ‘டிசிஎஸ்ஸில் இருந்து அமெரிக்க பணியாளா்கள் உள்பட 12,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களைப் பணிநீக்கம் செய்ய அண்மையில் அந்நிறுவனம் முடிவு செய்தது. அந்த நிறுவனம் 5,505 வெளிநாட்டவா்களைப் பணியமா்த்த ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பணியாளா்களை கூகுள் நிறுவனம் நீக்கியது. ஆனால் நிகழ் நிதியாண்டில் 4,181 வெளிநாட்டவா்களைப் பணியமா்த்த ஹெச்-1பி விசாவுக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதுபோல பிற நிறுவனங்களும் செய்துள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப தகுதிவாய்ந்த அமெரிக்க பணியாளா்களை கண்டறிய முடியவில்லை என்பதை நம்ப கடினமாக உள்ளது. இது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளன.