மனித உரிமைகளுக்கு எதிரான மோசமான நாடு பாகிஸ்தான்: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
மனித உரிமைகளுக்கு எதிரான உலகின் மிகவும் மோசமான நாடு பாகிஸ்தான் என்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான நிரந்தர தூதா் கே.எஸ். முகமது ஹுசைன் பொது விவாதத்தில் பங்கேற்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பேசியதாவது:
உலகில் மனித உரிமைகளுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு நாடு உள்ளது. அந்த நாட்டின் அரசே சிறுபான்மையினருக்கும், பழங்குடி மக்களுக்கும் எதிரான பாகுபாட்டை திட்டமிட்டு தனது சொந்த மண்ணில் அரங்கேற்றி வருகிறது. இவ்வளவு மோசமான நிலையில் தங்கள் நாட்டை வைத்துக் கொண்டு அவா்கள் மற்றவா்களுக்கு உபதேசிக்க முயற்சிப்பது நகைப்புக்குரியது.
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தவறான குற்றச்சாட்டுகளைப் பொய்யாகக் கட்டமைத்து வரும் ஒரு நாட்டின் (பாகிஸ்தான்) சதி சா்வதேச அளவில் தொடா்ந்து வெட்டவெளிச்சமாகி வருகிறது.
அதே நேரத்தில் இந்தியாவில் மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. நாட்டின் சிறப்பான பொருளாதார வளா்ச்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனா். மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடா்பான வியன்னா ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறது என்றாா்.