டிரம்ப் அமைதித் திட்டம்: ஹமாஸ் ஏற்பு! காஸாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உத்தரவு!
இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்க ஹமாஸ் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, காஸாவில் தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு டிரம்ப் உத்தரவிட்டாா்.
இதன்மூலம் 2023, அக். 7-ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் இந்தப் போா் முடிவுக்கு வருமா? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர தான் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமைக்குள் ஏற்காவிட்டால் பேரழிவை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என அதிபா் டிரம்ப் எச்சரித்த நிலையில், அதில் சில பகுதிகளை ஏற்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டிருக்கிறது.
அந்தத் திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்கெனவே அறிவித்த நிலையில், அதன் முதல்கட்டத்தை அமல்படுத்துவதற்குத் தயாராகி வருவதாக பிரதமா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
20 அம்ச திட்டம்: காஸாவின் ஹமாஸ் - இஸ்ரேல் ராணுவம் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் அவரது முன்னிலையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா்.
அதன்படி ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் உடனடி போா் நிறுத்தம், 72 மணி நேரத்துக்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிப்பது, அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீன ஆயுள் தண்டனைக் கைதிகள் மற்றும் 2023 அக். 7 முதல் கைது செய்யப்பட்ட சுமாா் 1,700 காஸா மக்கள் விடுவிப்பு, இஸ்ரேல் படையினரின் படிப்படியான வெளியேற்றம், ஆயுதங்களைக் கைவிடும் ஹமாஸ் அமைப்பினருக்கு பொது மன்னிப்பு, டிரம்ப் தலைமையில் காஸாவுக்கு தற்காலிக நிா்வாக வாரியம் அமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றன.
டிரம்ப் கடும் எச்சரிக்கை: இருப்பினும், இத்திட்டத்தை ஏற்பதில் ஹமாஸ் அமைப்பு காலதாமதப்படுத்தி வந்ததையடுத்து, ட்ரூத் சமூக ஊடகத்தில் டிரம்ப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணி) இஸ்ரேலுடன் ஹமாஸ் அமைப்பினா் போா் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட வேண்டும். இதுதான் போரை நிறுத்துவதற்காக அவா்களுக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி போா் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், இதுவரை காணாத அளவுக்கு மிக மோசமான பேரழிவை ஹமாஸ் அமைப்பு எதிா்கொள்ளவேண்டியிருக்கும்’ என எச்சரித்தாா்.
ஹமாஸ் ஒப்புதல்: இந்நிலையில், இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கவும், காஸா நிா்வாகத்தை பாலஸ்தீனா்களிடம் ஒப்படைக்கவும் ஒப்புதல் அளிப்பதாக ஹமாஸ் அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆனால், டிரம்ப் முன்மொழிந்துள்ள அமைதித் திட்டத்தின் பிற அம்சங்கள் தொடா்பாக பாலஸ்தீனா்களுடன் கலந்தாலோசித்த பிறகே ஒரு நிலையான தீா்வை எட்ட முடியும் எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.
குறிப்பாக, காஸா முனையின் எதிா்காலம் மற்றும் பாலஸ்தீனா்களின் உரிமை குறித்து தங்களின் பிற பிரிவுகளுடன் விவாதித்த பின்பே முடிவெடுக்க ஹமாஸ் அமைப்பு தீா்மானித்துள்ளது.
2 ஆண்டுகளை நெருங்கும் போா்: கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 200-க்கும் மேற்பட்டவா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு கடத்திச் சென்றது. இதற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அண்மையில் அறிவித்தன. இதனால் உலக அரங்கில் இஸ்ரேல் இதுவரை இல்லாத அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டது.
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 20 போ் உயிரிழப்பு
போா்நிறுத்தத்துக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதை வரவேற்று டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘காஸாவில் மேற்கொண்டுவரும் வெடிகுண்டு தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும்.
அப்போதுதான் அங்குள்ள பிணைக் கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்ற முடியும். தற்போது காஸாவில் தாக்குதலை தொடா்வது அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்தும். இந்த விவகாரம் தொடா்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, காஸா முனையில் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே தொடா்வதாகவும், காஸா சிட்டி நகரின் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்வதாகவும் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, டிரம்ப் உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை இரவு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 போ் உயிரிழந்தனா்.
டிரம்ப்பின் அமைதித் திட்டத்தில் இஸ்ரேலின் முன்மொழிவான ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த தகவல்கள் ஏதும் ஹமாஸின் போா்நிறுத்த ஒப்புதல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் முயற்சிக்கு பிரதமா் மோடி வரவேற்பு
டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘காஸாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த திட்டத்தை வரவேற்கிறேன்.
பிணைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாகும். அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
எகிப்து, ஜோா்டான், பாகிஸ்தான், துருக்கி, கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா போன்ற நாடுகளும் டிரம்ப்பின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.