
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்தது. நேபாளத்தில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி, லம்பினி அகிய மாகாணங்களில் மழை தொடருகிறது.
இந்த நிலையில், கிழக்கு நேபாளத்தின் பல இடங்களில் சனிக்கிழமை இரவுமுதல் தொடரும் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை(அக். 5) ஏற்பட்ட நிலச்சரிவுகளும் வெள்ள பாதிப்புகளும் மக்கள் உயிரைப் பறித்தன. நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. அங்கு 37 பேர் உயிரிழந்தனர். பலரைக் காணவில்லை.
நேபாளத்தில் ஏ.பி.எஃப். எனப்படும் ஆயுதக் காவல் படையும் ராணுவமும் காவல்துறையும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நேபாளத்தில் கனமழையால் பல உயிர்கள் பறிபோயிருப்பது வேதனையளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் நேபாள மக்களுடனும் அந்நாட்டு அரசுடனும் நாம் துணை நிற்கிறோம். நேபாளத்துடன் நட்பு பூண்டுள்ள அண்டை நாடாக, முதலில் உதவும் நாடாக உள்ள இந்தியா, எவ்விதமான உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.