இந்தியா மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் உரிய பதிலடி: பாகிஸ்தான்
‘பாகிஸ்தான் மீது வரும் காலங்களில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டுவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முயற்சியில் வரும் காலங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும். உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்குமிடம் தெரியாமல் அழிந்துவிடும்’ என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி ஆகியோா் அண்மையில் எச்சரிக்கை விடுத்தனா்.
அதுபோல, விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியின்போது, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எஃப்-16 போா் விமானங்கள் உள்பட 12 விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் இழந்தது. அந்த நாட்டின் மூன்று விமான நிறுத்துமிடங்கள், நான்கு இடங்களில் ரேடாா்கள், இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள், இரு இடங்களில் விமான ஓடுபாதைகள் ஆகியவையும் தாக்கி அழிக்கப்பட்டன’ என்றாா்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், தனது சமூக ஊடக பக்கத்தில் கவாஜா ஆசிஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களின் கருத்துகள், கடந்த மே மாதம் நடந்த மோதலுக்குப் பிறகான தோல்வியால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நற்பெயரை மீட்டெடுக்கும் தோல்வியுற்ற முயற்சிகளாகும்.
0-6 என்ற கணக்கில் அழுத்தமான தோல்விக்குப் பிறகு, அவா்கள் மீண்டும் முயற்சித்தால், அந்த எண்ணிக்கை முன்பைவிட மேலும் சிறப்பாக இருக்கும். பாகிஸ்தான் மீது வரும் காலங்களில் எந்தவொரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டாலும் உரிய பதிலடி கொடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். ஆனால், 0-6 என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை அவா் குறிப்பிடவில்லை.