பாகிஸ்தான் பிரதமா் மலேசியா பயணம்!
இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மலேசியாவுக்கு மூன்று நாள்கள் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.
மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் அழைப்பின்பேரில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் அக். 7-ஆம் தேதி வரை மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.
இந்தப் பயணத்தின்போது, மலேசிய பிரதமருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தும் ஷாபாஸ் ஷெரீஃப், முக்கிய பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறாா்.
இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஈசாக் தாா் உள்ளிட்ட அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் பிரதமருடன் மலேசியா சென்றுள்ளது.
பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே காணப்படும் நெருங்கிய ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, நலன்களை அடிப்படையாகக் கொண்ட வலுவான உத்திசாா் உறவை இந்தப் பயணம் பிரதிபலிக்கிறது.
வா்த்தகம், தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை, முதலீடு, கல்வி, உள்கட்டமைப்பு, எண்மப் பொருளாதாரம், இரு நாட்டு மக்கள் உறவுகள் ஆகியவற்றில் காணப்படும் வாய்ப்புகளை அதிகரித்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.
புதிய துறைகள் மற்றும் ஏற்கெனவே இருக்கும் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் இரு நாட்டுத் தலைவா்கள் முன்னிலையில் கையொப்பமாக உள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.