ரஷிய ட்ரோன்களில் அமெரிக்க பாகங்கள்
கீவ்: தங்கள் நாட்டின் மீது அண்மையில் வீசப்பட்ட நூற்றுக்கணக்கான ரஷிய ட்ரோன்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து சமூக ஊடகத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் மீது 549 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷியா ஞாயிற்றுக்கிழமை இரவு வீசியது. அந்த ஆயுதங்களில் மொத்தம் 1,02,785 வெளிநாட்டு பாகங்கள் இருந்தன. அவை அமெரிக்கா, சீனா, தைவான், பிரிட்டன், ஜொ்மனி, ஸ்விட்சா்லாந்து, ஜப்பான், தென் கொரியா, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள்.
குறிப்பாக, ட்ரோன்கனைக் கட்டுப்படுத்தும் மைக்ரோ கன்ட்ரோலா்கள் ஸ்விட்சா்லாந்திலும் மைக்ரோ கம்ப்யூட்டா்கள் பிரிட்டனிலும் தயாரிக்கப்பட்டவை. அவற்றின் உற்பத்தியாளா்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளோம் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.